கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க, நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக பல வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல திட்டமிட்டனர். ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் அவர்கள் சென்னையில் சமுதாய நல கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளதா என்பது உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்து, மாத்திரைகளும் வழங்கப்பட்டது.
இதுகுறித்து அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவன தலைவர் மூ.ராஜேஸ்வரி பிரியா பேசுகையில், கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க அனைவரும் தனித்திருக்க வேண்டும், வீட்டில் இருக்க வேண்டும், சமுதாய தொற்றாக அது மாறாமல் இருக்க ஒருவருக்கொருவர் இடைவெளிவிட்டு இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அரசும் இதைத்தான் சொல்கிறது, அதனால்தான் தற்போது ஊரடங்கும் போடப்பட்டுள்ளது. நாடு முழுக்க அனைத்து மக்களுக்கும் இது பொருந்தும்.
இந்த நேரத்தில் ஜெ. நினைவிட கட்டுமான பணிகள் தற்போது நடந்து வருவது வருத்தம் அளிக்கிறது. வடமாநில தொழிலாளர்கள் அங்கேயே தங்கி பணியாற்றுகிறார்கள். அங்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்.
நோய் பரவுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னை ஆர். ஏ. புரத்தில் வடமாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள சமுதாய நல கூடத்தில் ஆய்வு செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வடமாநில தொழிலாளர்களுக்கு உடைகள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். அதனை வரவேற்கிறோம், பாராட்டுகிறோம். அதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.
ஆனால் ஜெ. நினைவிட கட்டுமான பணிகள் இப்போது தேவையா? என்பதுதான் எங்களது கேள்வி. பத்திரிகைகளில் வந்த புகைப்படத்தை பார்த்தால் அவர்கள் இடைவெளி இல்லாமல்தான் இருக்கிறார்கள். அந்தப் பணிகளை தற்போது தள்ளி வைத்தால் என்ன? அப்படி என்ன அவசரம்?. மக்கள் உயிர்தானே முக்கியம்.
அரசே இதுபோன்ற பணிகளில் ஈடுபட்டால், தனியார் கட்டுமானத்துறையைச் சேர்ந்தவர்கள், தனியார் தொழிற்சாலைகள் நாங்களும் பணிகளை தொடங்குகிறோம் என்பார்கள். ஆகையால் ஜெ. நினைவிட கட்டுமான பணிகளில் ஈடுபட்டவர்களையும் ஊரடங்கு முடியும்வரை வேலைவாங்கக் கூடாது. அவர்களுக்கும் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்றார்.