
தமிழக அரசியலில் தனித்துவமான பயணத்தை மேற்கொண்டவர் நயினார் நாகேந்திரன். திருநெல்வேலியில் பிறந்து, தற்போது திருநெல்வேலி எம்எல்ஏ மற்றும் பாஜக சட்டமன்ற குழு தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். அவரது திராவிட அரசியல் பின்புலம் மற்றும் தென் மாவட்டங்களில் செல்வாக்கு அவரை கட்சியில் முக்கிய நபராக்குகிறது. நயினார் நாகேந்திரனின் அரசியல் பயணத்தையும் அவரது சர்ச்சைப் பின்னணியையும் விரிவாகப் பார்க்கலாம்.
நயினார் நாகேந்திரன், அக்டோபர் 16, 1960 அன்று திருநெல்வேலியில் பிறந்தவர். இவரது ஆரம்ப வாழ்க்கை, தென் தமிழகத்தின் கிராமியப் பின்னணியில், எளிமையாக அமைந்தது. கல்வியிலும், சமூகப் பணிகளிலும் ஆர்வம் காட்டிய இவர், இளம் வயதிலேயே மக்கள் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ளும் திறனை வளர்த்துக்கொண்டார். திருநெல்வேலியின் மக்களுடன் இயல்பாகப் பழகிய இவருக்கு, அரசியல் ஒரு இயற்கையான பாதையாக அமைந்தது.
நயினார் நாகேந்திரனின் அரசியல் பயணம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் (அதிமுக) தொடங்கியது. 2001 ஆம் ஆண்டு, திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் முதன்முறையாக வெற்றி பெற்று, சட்டமன்ற உறுப்பினரானார். இந்த வெற்றி, இவரை அதிமுகவின் முக்கிய நபராக உயர்த்தியது. 2001 முதல் 2006 வரை, ஜெயலலிதா மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆட்சியில், மின்சாரத்துறை மற்றும் தொழில்துறை அமைச்சராகப் பணியாற்றினார். இவரது நிர்வாகத் திறமையும், மக்களோடு நெருக்கமாகப் பழகும் பாங்கும், அவருக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துத் தந்தது.
2011 ஆம் ஆண்டு, மீண்டும் திருநெல்வேலி தொகுதியில் வெற்றி பெற்று, தனது செல்வாக்கை உறுதிப்படுத்தினார். ஆனால், 2016 இல், திமுக வேட்பாளரிடம் 601 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தார். இந்தத் தோல்வி, இவரது அரசியல் பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. 2017 ஆம் ஆண்டு, நயினார் நாகேந்திரன் அதிமுகவிலிருந்து விலகி, பாரதிய ஜனதா கட்சியில் (பாஜக) இணைந்தார். இந்த முடிவு, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 2019 இல், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார், ஆனால் வெற்றி பெறவில்லை. இருப்பினும், 2021 ஆம் ஆண்டு, திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராக மீண்டும் வெற்றி பெற்று, தனது அரசியல் உயிர்ப்பை நிரூபித்தார். தற்போது, இவர் பாஜகவின் தமிழக சட்டமன்றக் குழுத் தலைவராகவும், மாநில துணைத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.
நயினார் நாகேந்திரனின் அரசியல் பயணம் எப்போதும் சவால்களும் சர்ச்சைகளும் நிறைந்ததாகவே இருந்துள்ளது. 2006 ஆம் ஆண்டு, இவர் அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறப்பட்டு, ஊழல் தடுப்பு இயக்குநரகத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். 2024 இல், தேர்தல் காலத்தில்.. தாம்பரத்தில் ரயிலில் வைத்து ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் இவரது பெயர் இணைக்கப்பட்டது, ஆனால் இவர் அதற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என மறுத்தார். அதேபோல, ஆண்டாள் பற்றி தவறாக பேசிய கவிஞர் வைரமுத்துவின் நாவை அறுத்தால் ரூ.10 கோடி வழங்குகிறேன் என்று பாஜக மாநில துணை தலைவராக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரன் பேசியது, அவருக்கு பெரிய ஊடக வெளிச்சத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
2021ல் பாஜக மாநிலத் தலைவராக நடப்பு தலைவர் நியமிக்கப்பட்டபோது, நயினார் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இதை எதிர்பார்க்கவில்லை. நயினாருக்கு தலைமை பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைய நடப்பு தலைவரின் நியமனம் உட்கட்சி பூசல்களுக்கு வித்திட்டது. தற்போதைய பாஜக தலைவர் கொங்கு பகுதியிலும், நயினார் தென் மாவட்டங்களிலும் செல்வாக்கு கொண்டவர்கள். இந்த பிராந்திய பிரிவு, கட்சி உறுப்பினர்களிடையே அணிகளாக பிரிந்து மோதலுக்கு வழிவகுத்தது. பாஜக மாநிலத் தலைவர் அதிமுகவை கடுமையாக விமர்சித்து, தனித்து செல்லும் மனநிலையை வெளிப்படுத்தியதை நயினார் நாகேந்திரன் போன்றவர்கள் ஆதரிக்கவில்லை, ஏனெனில் அவர்கள் கூட்டணி அரசியலுக்கு ஆதரவாக இருந்தனர். இத்தகைய சர்ச்சைகள் இருந்தபோதிலும், திருநெல்வேலியில் இவரது தனிப்பட்ட செல்வாக்கு குறையவில்லை.
நயினார் நாகேந்திரன், எம்ஜிஆர் விசுவாசியாக அறியப்படுபவர். அதிமுகவில் தொடங்கி, பாஜகவில் தற்போது முக்கிய பொறுப்பு வகிக்கும் இவர், தமிழக அரசியலில் கூட்டணி உறவுகளை வலுப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து இவர் வெளிப்படுத்திய கருத்துகள், அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகின. இந்தநிலையில், தமிழக பா.ஜ.க - வின் முக்கிய தலைவர்கள் அனைவரும் இணைந்து நயினார் நாகேந்திரனை தலைவராகப் பரிந்துரை செய்து விருப்ப மனு அளித்துள்ளனர். அதன்படி பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்படயிருக்கிறார்.