
சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 135ஆவது ஆண்டு பிறந்த நாள் இன்று (14.04.2025) நாடு முழுவதும் வெகு விமரிசையாக அனுசரிக்கப்பட்டது. அந்த வகையில் திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று காலை 10 மணியளவில் சென்னை பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கம் முகப்பில் உள்ள சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மலர் மாலை அணிவித்தும் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது உருவ படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். அதோடு தமிழ்நாடு அரசின் அரசாணையாக வெளியிடப்பட்ட அம்பேத்கர் பிறந்த நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
அதாவது, “ஜாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும் ஜாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி, ஒடுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து,எளிய மக்களின் உரிமைகளைப் பற்றிய விழிப் புணர்வை ஊட்டிய, நம் அரசமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளில், ஜாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும்,சக மனிதர்களை ஜாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காண மாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமாற உறுதி ஏற்கிறேன்’ என கி.வீரமணி சொல்ல அதனை திராவிடர் கழகத்தினர் திரும்ப சொல்லி உறுதிமொழி ஏற்றனர்.
இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி எனப் பலரும் கலந்து கொண்டனர்.