
திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது 1929ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 97வது ஆண்டு ஆஸ்கர் விழா இந்தாண்டு நடந்து முடிந்தது. இதில் 2024ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கு விருது வழங்கப்பட்டது. சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வரும் இந்த விருது விழாவில் தற்போது புதிதாக ஒரு பிரிவு இணைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ஆஸ்கர் விருது வழங்கும் அகாடமி குழு அறிவித்துள்ளது.
சண்டைப் பயிற்சியாளர்களை கௌரவிக்கும் வகையில் ‘ஸ்டண்ட் டிசைன்’(Stunt Design) என்ற புதிய பிரிவை அகாடமி அறிவித்துள்ளது. இந்த விருது 2028ல் நடக்கும் 100வது ஆஸ்கர் விருது விழா முதல் வழங்கப்படவுள்ளது. இந்த விழாவில் 2027ல் வெளியான படங்களுக்கு கொடுக்கும் விருது விழா என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக அகாடமி குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி பில் கிராமர் மற்றும் தலைவர் ஜேனட் யாங் கூறுகையில், “சினிமாவின் ஆரம்ப நாட்களிலிருந்தே, ஸ்டண்ட் டிசைன் என்பது திரைப்படத் தயாரிப்பின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இந்த தொழில்நுட்ப மற்றும் படைப்பாற்றல் மிக்க கலைஞர்களின் பணிகளைப் கௌரவிப்பதில் நாங்கள் பெருமைக் கொள்கிறோம்” என்றுள்ளனர்.