
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் முருகன் கோயில் அமைந்துள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குத் தினசரி ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு வரும் பக்தர்கள் அங்குள்ள கடற்கரையில் புனித நீராடிவிட்டு அதன் பின்னர் முருகனை தரிசனம் செய்யச் செல்வது வழக்கம்.
இத்தகைய சூழலில் தான் வார இறுதி விடுமுறை, மேலும் தமிழ் புத்தாண்டு என்பதாலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இன்று (14.04.2025) காலை முதல் அதிகப்படியான பக்தர்கள் திருச்செந்தூர் கோயிலில் குவிந்துள்ளனர். இந்நிலையில் மதியம் 3 மணியளவில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதன் காரணமாக சுமார் 100 அடிக்குக் கடல் அலைகள் கரையை நோக்கி வந்தன.
அதனைத் தொடர்ந்து மாலை 5 மணியளவில் 500 மீட்டர் தூரம் வரை 75 அடிக்குக் கடல் உள்வாங்கிக் காணப்பட்டது. திருச்செந்தூர் கோயில் பகுதியில் உள்ள கடற்கரையில் கடல் சீற்றத்துடனும், உள்வாங்கியும் காணப்படுவதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் அச்சத்துடனே கடலில் குளித்து வருகின்றனர்.