
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காது முட்டுக்கட்டை போடும் தமிழக ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் வரலாற்று தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.
அந்த தீர்ப்பில், 'தமிழக அரசின் பத்து மசோதாக்களை நிறுத்தி வைத்த ஆளுநரின் செயல் சட்டப்படி தவறானது. இரண்டாவது முறையாக மசோதா நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டபோது அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கிறார். இது சரியா? ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை. (மசோதாவை நிராகரிப்பது, மசோதாவைத் திரும்பப் பெறுவது அல்லது மசோதாவுக்கு தனது ஒப்புதலைத் தடுத்து நிறுத்துவது இந்தியக் குடியரசுத் தலைவரின் பொறுப்பாகும். மசோதா மீது ஜனாதிபதியின் தேர்வு 'வீட்டோ அதிகாரம்' என்று அழைக்கப்படுகிறது)
மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது பல்வேறு தீர்ப்புகளில் உள்ளன. பஞ்சாப் ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவான தீர்ப்பை கூறியுள்ளது. மசோதாக்களுக்கு உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்கும் முடிவை ஆளுநர் எடுக்க வேண்டும். மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைப்பதை ஏற்க முடியாது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது அல்லது திருப்பி அனுப்பி வைக்கும் முடிவை ஆளுநர்கள் ஒரு மாதத்திற்குள் எடுக்க வேண்டும்' என காலக்கெடு விதித்ததோடு, 'பதவி பிரமாணத்தின் படி ஆளுநர் செயல்பட வேண்டும். பத்து மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்த தமிழ்நாடு ஆளுநரின் முடிவை உச்சநீதிமன்றம் ரத்து செய்கிறது. அந்த பத்து மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாக எடுத்துக் கொள்ளப்படும்' என உச்சநீதிமன்றம் 142 ஆவது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தீர்ப்பளித்துள்ளது.
'அதிகாரம் மிக வலியது' என்ற கூற்றுப்படி மிக சிக்கலான நேரங்களில் உச்சநீதிமன்றம் 142 சிறப்பு அதிகாரத்தை கையிலெடுத்து தீர்ப்புகளை வழங்கியுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 142ன் கீழ் உச்சநீதிமன்றம், தனது சிறப்பு அதிகார வரம்பைப் பயன்படுத்தி, வழக்கு விசயத்தில் முழுமையான நீதியை வழங்குவதற்குத் தேவையான ஆணையை அல்லது உத்தரவை பிறப்பிக்கலாம். நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட எந்தவொரு சட்டத்தின் விதிகளுக்கும் உட்பட்டு, உச்ச நீதிமன்றம், ஒருவரின் இருப்பை பாதுகாக்கும் நோக்கத்திற்காக எந்த உத்தரவையும் பிறப்பிக்க மற்றும் அனைத்து அதிகாரங்களையும் கொண்டுள்ளது.

அதன்படி கடந்த காலங்களில் பல்வேறு வழக்குகளில் 142 சிறப்பு அதிகாரத்தை உச்சநீதிமன்றம் கையில் எடுத்துள்ளது. 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி போபாலில் யூனியன் கார்பைடு எனும் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் மீத்தைல் ஐசோசயனேட் எனும் நச்சு வாயு கசிந்ததினால் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். ஏறத்தாழ 2,259 பேர் விஷவாயு தாக்கி இறந்தனர். அதற்கடுத்த இரண்டு வாரங்களில் மேலும் 8,000 பேர் இறந்தனர். இன்னும் 8,000 பேர் வாயு தாக்கத்தினால் ஏற்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு இறந்தனர். போபால் அழிவு என்ற அந்த பெருந்துயரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான தீர்ப்பில் உச்சநீதிமன்றம் 1998 ஆம் ஆண்டு 142 சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு 470 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
அதேபோல் 142 விதியை பயன்படுத்தி நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டி 500 மீட்டர் தூரத்தில் உள்ள மதுக்கடைகளை மூட உச்சநீதிமன்றம் கடந்த 2016 ஆண்டு தீர்ப்பளித்தது.

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு 2019 ஆம் ஆண்டு நவம்பர் 9 அன்று தீர்ப்பு வழங்கியது. சன்னி வக்ப் வாரியத்திற்கு மசூதி கட்டிக் கொள்ள அயோத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்படுகிறது என தலைமை நீதிபதி தெரிவித்தார். சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்திய அரசுக்கே உரிமை என்றும், ராம ஜென்ம பூமியில் மூன்று மாதத்திற்குள் ஒரு அறக்கட்டளை மூலம் குழந்தை இராமருக்கு கோயில் கட்ட அரசு அனுமதி வழங்கலாம் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதிலும் 142 சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழ்நாடு அமைச்சரவை 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 9 அன்று தீர்மானம் நிறைவேற்றியது. சிறையில் உள்ள இராஜீவ் கொலையாளிகள் விவகாரத்தில் சட்டப் பிரிவு 161ஐ பயன்படுத்தி தமிழ்நாடு ஆளுநர் முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 அன்று தீர்ப்பளித்தது.

இதையடுத்து இவர்கள் எழுவரையும் விடுதலை செய்ய அப்போதைய அதிமுக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி தமிழக ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பியிருந்தது. ஆனால் அந்த பரிந்துரை மீது முடிவெடுப்பதில் தமிழ்நாடு ஆளுநர் கால வரம்பற்ற தாமதம் செய்தார். இதை சுட்டிக்காட்டியே அரசமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவின் கீழ் தங்களுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி 2022 ஆம் ஆண்டு மே 18 அன்று பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இந்த வரிசையில் ஆளுநர் தொடர்பான வழக்கிலும் உச்சநீதிமன்றம்142 சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி 'மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது அல்லது திருப்பி அனுப்பி வைக்கும் முடிவை ஆளுநர்கள் ஒரு மாதத்திற்குள் எடுக்க வேண்டும். பத்து மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்த தமிழ்நாடு ஆளுநரின் முடிவை உச்சநீதிமன்றம் ரத்து செய்கிறது. அந்த பத்து மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாக எடுத்துக் கொள்ளப்படும்' என உச்சநீதிமன்றம் 142 ஆவது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தீர்ப்பளித்துள்ளது.
ஆளுநர்கள் தீர்மானங்களில் முடிவெடுக்க காலக்கெடு விதித்துள்ள உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.