
திருடியதாகக் கூறி பழங்குடின சிறுவனை மரத்தில் கட்டி வைத்து எறும்புகளால் கடிக்க வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், தாவங்கேர் மாவட்டம் அஸ்தபனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுவன். ஹக்கி - பிக்கி எனும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இந்த சிறுவன் திருடியதாக சிறுவனின் மாமா மற்றும் அவரது உறவினர்கள் குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.
அதற்கு தண்டனை கொடுக்கும் விதமாக, அந்த சிறுவனின் மேலாடைகளை அவிழ்த்து பாக்கு மரம் ஒன்றில் கயிற்றால் கட்டி வைத்து அடித்துள்ளனர். மேலும், அவரது பிறப்புறுப்பில் சிவப்பு எறும்புகளை போட்டு கடிக்க வைத்ததாகக் கூறப்படுகிறது. இதில், அந்த சிறுவன் வலி தாங்க முடியாமல் அலறி துடித்துள்ளார். இந்த சம்பவத்தை அங்குள்ளவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுவனின் தாத்தா கொடுத்த புகாரின் அடிப்படையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சுபாஷ் (21), லக்கி (21), தர்ஷன் (22), பரசு (25), சிவதர்ஷன் (23) ஹரிஷ் (25), பட்டி ராஜு (20), பூமி (18), மதுசுதன் (30) ஆகிய 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.