
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தொடர்பாக உச்சநீதிமன்றம் ஆழமான தீர்ப்பை வழங்கியுள்ளது. இது வரவேற்கத்தக்க ஒன்றாகும். குறிப்பாக அவர் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கால நீட்டிப்பு செய்து தமிழக அரசை முடக்குகின்ற செயலில் இருந்து வந்துள்ளதாக தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
415 பக்கம் உள்ள அந்த தீர்ப்பில் ஒரு ஆளுநர் எவ்வளவு மோசமாக செயல்பட்டுள்ளார் என்பதை ஆழமாகவும் அழுத்தமாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஒரு ஆளுநர் சட்ட வரம்பிற்குட்பட்டு தான் செயல்பட வேண்டும். சட்டத்திற்கு உட்படாத விஷயங்களை செய்வது சட்ட விரோதம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதில் மோசமானது என்னவென்றால் ஊழல் குற்றச்சாட்டில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் வீரமணி, ரமணா போன்ற போன்றவர்கள் மீது விசாரணை நடத்த அனுமதி வழங்கவில்லை. ஊழல் குற்றவாளிகளை பாதுகாக்க ஆளுநரே கேடயமாக இருந்து கோப்புக்கு ஒப்புதல் கொடுக்காமல் இருந்துள்ளார்.
அதேபோல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் கோப்புக்கும் ஒப்புதல் அளிக்கவில்லை. பணியாளர் தேர்வாணையத்தை முடக்குவது என்பது ஆளுநர் செய்வது சாதாரண குற்றம் அல்ல. இது ஒரு கிரிமினல் குற்றமாக உள்ளது என தீர்பில் குறிப்பிட்டுள்ளனர். ஆளுநரை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். உடனடியாக ஆளுநரை திரும்ப பெற சட்டமன்றத்தில் சட்டம் இயற்றி அனுப்ப வேண்டும். அவரது பணி காலம் முடிந்த பிறகும் அவரை நீட்டிக்க வேண்டிய காரணம் என்ன ஒன்றிய அரசும் இதற்கு துணையாக இருக்கிறது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
அவருக்கு ஆளுநர் பதவியில் நீடிக்க எந்த தகுதியும் இல்லை. உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். அதிமுக - பாஜக கூட்டணி அறிவித்துள்ளனர் ஏற்கனவே கூட்டணியில் உள்ள கட்சிகளின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. பாட்டாளி மக்கள் கட்சியில் உள்ள சண்டை குடும்ப சண்டை போல் தெரியவில்லை. எந்த கூட்டணியில் சேர்வது என்பதில் தான் சண்டை போல் உள்ளது. அதிமுக - பாஜக ஏற்கனவே குழப்பமான கூட்டணி தான். அதிமுக - பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளது தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கு துரோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த தேர்தலில் அதிமுக தனித்து நின்றது தற்போது பாஜகவுடன் கூட்டணி சேர்வதில் தமிழகத்திற்கு என்ன மாற்றத்தை பாஜக செய்துள்ளது. நீட் தேர்வுக்கு அனுமதி அளிக்கவில்லை, வஃபு மசோதா நிறைவேற்றம் உள்ளிட்ட மக்கள் விராத கொள்கைகளை சட்டமாக்கியுள்ளது. இது எடப்பாடி பழனிச்சாமியை பாதுகாத்துக் கொள்வதற்கான கூட்டணி தான்.

இது அதிமுகவுக்கும், தமிழக மக்களுக்கும் பயனளிக்காது. இதனை ஜெயலலிதாவின் விசுவாசிகள், அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய போது அதிமுக தொண்டர்கள் வெடி வெடித்துக் கொண்டாடினார்கள். ஆனால் தற்போது கூட்டணி சேரும்போது அவர்கள் என்ன செய்வது என தெரியாமல் அமைதியாக உள்ளனர். அமைச்சர் பொன்முடி பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது. பொதுவெளியில் இதுபோல் யாரும் பேசக்கூடாது. கூட்டணி அறிவிக்கும் போது இரு கட்சி தலைவர்கள் அறிவிக்க வேண்டும். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அமைதியாக அமர்ந்திருந்தார். அந்த அளவு அதிமுகவை பாஜக அடிமையாக்கி உள்ளது.
அம்பேத்கர் ஒரு தேசிய தலைவர் அவரை சாதி அடையாளத்துடன் பார்ப்பதை யாரும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. அவரது சிலையை தலித் மக்கள் வாழும் பகுதியில் தான் வைக்க வேண்டும் என்பதும் ஏற்றுக் கொள்ள முடியாதது. அவருக்கு பரவலாக அனைத்து சமூக மக்கள் வசிக்கும் இடத்திலும், அனைத்து மக்களும் ஒன்று கூடும் பொது இடங்களிலும், முக்கிய இடங்களிலும் சிலைகளை நிறுவி சதுக்கம் அமைக்க வேண்டும்” என்று கூறினார். அப்போது கட்சியின் மாவட்ட செயலாளர் கோ. மாதவன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி. கருப்பையன், ப. வாஞ்சிநாதன், நகர செயலாளர் ராஜா, நகர்மன்ற துணைத்தலைவர் முத்துகுமரன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.