
நெல்லை எம்.பி. தொகுதி கூட்டணி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு அந்தக் கட்சியின் பொறுப்பாளர்கள் தேர்தல் களப் பணிகளில் தீவிரமாக, குறிப்பாக நெல்லை கி.மாவட்ட தி.மு.க.வில் சுணக்கம் பற்றிய தகவல் முதல்வருக்குப் பறக்க, கூட்டணி கட்சியை வெற்றிக்குக் கொண்டு வருகிற தொகுதிப் பொறுப்பை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைத்தார் முதல்வர்.
களத்திலிறங்கிய அனிதாவிற்கு நெல்லை கி.மாவட்ட தி.மு.க.வின் பொறுப்பாளர்கள் கடந்த தேர்தல்களில் நடந்து கொண்ட சைலண்ட் விஷயங்கள் அனைத்தும் கிடைத்திருக்கின்றன. அதனை மனதில் வைத்துக் கொண்டே பணிகளில் உ.பி.க்களை விரைவுபடுத்தியிருக்கிறார்.
கி.மாவட்டத்தின் தி.மு.க. மா.செ. ஆவுடையப்பன், அவரது பொறுப்பில் வருகிற திசையன்விளையின் வைகறை திருமண மண்டபத்தில் ஏப். 6 அன்று அந்தப் பகுதி தி.மு.க.வின் செயல்வீரர்கள் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். பொறுப்பாளர் மேற்பார்வை என்பதால் மண்டபத்தில் தி.மு.க.வினர் திரண்டிருந்தார்கள். இவர்களில் திசையன்விளை நகர செ.வான ஜான்கென்னடி மற்றும் ஆதரவாளர்களும் இணைந்திருக்கின்றனர். மாவட்டம் ஆவுடையப்பன் ஆப்சென்ட். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் திசையன்விளை பேரூராட்சித் தலைவி தேர்தலில் நகர தி.மு.க. நிர்வாகிகள் சைலண்ட்டாகி மறைமுகமாக உதவியதால் பேரூராட்சி அ.தி.மு.க. வசம் சென்றதை மனதில் வைத்தபடி பேசிய அனிதா ராதா கிருஷ்ணன்.

போன உள்ளாட்சித் தேர்தலில் மாவட்டமும், ந.செ. ஜான்கென்னடியும் மறைமுகமாக அ.தி.மு.க.விற்கு சப்போர்ட் செய்ததால் அ.தி.மு.க.வின் ஜான்சிராணி பேரூராட்சித் தலைவியானார். நம்ம கட்சி வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டார். அத மாதிரி இந்தத் தேர்தல்ல பா.ஜ.க.வுக்கு மறைமுகமாக சப்போர்ட்னு தெரிஞ்சா காரணமானவங்க பற்றி கட்சித் தலைமைக்கு ரிப்போர்ட் பண்ணிறுவோம். நிர்வாகிகள் மேல் கடும் நடவடிக்கை பாயும் என்ற போது அரங்கத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
அதனை கட்டுப்படுத்திய அனிதா ராதகிருஷ்ணன் ந.செ. ஜான்கென்னடியை ஒதுக்கிவிட்டு, எம்.பி. தேர்தலுக்கான திசையன்விளை நகர பொறுப்பாளர்கள் என்று ஒ.செ. வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், நெல்சன், எம்.என்.கண்ணன், ரமேஷ் என்று நான்கு பேர்களின் பெயரை அனிதா ராதகிருஷ்ணன் அறிவித்தார். உடனேயே மண்டபத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட, கட்சியினர் சிலர் நகரத்திற்கு ஒன்றியத்தைச் சேர்ந்தவர்களைப் பொறுப்பாளராக்கியிருக்கிறீர்கள். அப்ப ஒன்றியத்திற்கு யார் பொறுப்பாளர் என்று கேட்க, ஒன்றியத்துக்கு நாந்தான்யா பொறுப்பாளர். தேர்தல் வேலையப் பாருங்கய்யா என்று சொல்லிவிட்டு அமைச்சர் அனிதா கிளம்பியபோது கட்சியினரிடையே வாக்குவாதம், கூச்சல் குழப்பம். அதனைப் பொருட்படுத்தாமல் புறப்பட்டுச் சென்றிருக்கிறாராம் அனிதா ராதாகிருஷ்ணன்.
நடப்பவைகள் தலைமைக்குப் பறந்தால் நடவடிக்கை என்ற பயத்தில் மண்டபத்தில் எழுந்த கூச்சலும் குழப்பமும் கிளம்பிய வேகத்தில் அடங்கியது.