
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 52 என்ற எண் கொண்ட அரசுப் பேருந்து சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை பாலச்சந்திரன் என்பவர் ஓட்டிச் சென்றார். சுமார் 20க்கும் மேற்பட்ட பயணிகள் அந்த பேருந்தில் பயணம் செய்தனர். அதனபடி இந்த பேருந்து ராசிபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்தின் முன் சக்கரம் கழண்டு ஓடியது. அப்போது சாலைக்கும், சக்கரத்தின் அச்சுக்கும் இடையே உராய்வு ஏற்பட்டு சத்தம் கிளம்பியதால் பேருந்தில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர்.
இதனையடுத்து உடனடியாக பேருந்து ஓட்டுநர் பாலச்சந்திரன் சாதுரியமாக பேருந்தை சாலை ஓரத்தில் நிறுத்தினார். எனவே பேருந்தில் பயணித்த அனைவரும் பத்திரமாக உயிர் தப்பினர். அதே சமயம் சக்கரம் அருகில் இருந்த சாக்கடையில் விழுந்தது. இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பேருந்தின் சக்கரத்தை மீண்டும் பேருந்தில் பொருத்தும் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அதோடு பயணிகள் அனைவரும் மாற்றுப் பேருந்தில் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டுநரின் சாதுரியத்தால் பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் பத்திரமாக தப்பினர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு போக்குவரத்துக்கழகம் விளக்கமளித்துள்ளது. அதில், “இன்று (14.04.2025) ‘அரசு பேருந்தின் டயர் கழன்று உருண்டு ஓடியது’ என்ற தலைப்பில் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் செய்தி வெளியானது.மேற்படி தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான செய்தியில் குறிப்பிட்டுள்ள பேருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் கோட்டம், இராசிபுரம் கிளையைச் சார்ந்த டி.என். 30 என் 1103 (TN 30 N 1103) எண்ணுள்ள நகர பேருந்து ஆகும். இன்று காலை 08:04 மணியளவில் இராசிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து நடை எடுத்து சேலம் நோக்கி செல்லும் போது சுமார் 08:20 மணியளவில் ஆஞ்சநேயர் கோவில் அருகில் அப்பேருந்தின் முன் இடதுபுற டயர் பியரிங் ஜாம் (Bearing Jam) ஆனதால் அப்பேருந்தின் டயர் கழன்று விட்டது.
அப்பேருந்து 09.03.2025 அன்று வீல் சர்வீஸ் (Wheel Service) மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 23.03.2025 அன்று அப்பேருந்துக்கு முன் இடதுபுற வீலுக்கு அவுட்டர் பியரிங் (Wheel Outer Bearing) மாற்றப்பட்டுள்ளது. இப்பணியின் போது வீல் பிளே (Wheel Play) சரியாக உள்ளதா என்பதனை சோதனை செய்யப்பட்டு இருந்தாலும் 07.04.2025 - அன்று வாராந்திர பாரமரிப்பு பணி மேற்கொண்ட போதும் வீல் ஷேக் (Wheel shake) சரியான அளவில் உள்ளதா என்பதனை சோதனை செய்து இருந்தால் இவ்வழித்தட முறிவினை தவிர்த்து இருக்கலாம்.

எனவே, வீல் பியரிங் மாற்றம் செய்யப்பட்ட போது, வாராந்திர பாரமரிப்பு பணி மேற்கொண்ட போது வீல் பிளே சரியாக உள்ளதா என்பதனை முறையாக சோதனை செய்யாத தொழில்நுட்ப பணியாளர்கள் நால்வர் மீதும், இப்பணியினை சரியாக கண்காணிக்காத மேற்பார்வையாளர்கள் இருவர் மீதும் மற்றும் சம்மந்தப்பட்ட கிளை மேலாளர் உட்பட் 7 பேர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுனர் என்பதனை தெரிவித்து கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.