
நாடாளுமன்ற மக்களவையில் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜூ கடந்த 2ஆம் தேதி (02.04.2025) தாக்கல் செய்தார். இந்த மசோதா மீதான விவாதத்தில் திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்றது. சுமார் 12 மணி நேரத் தொடர் விவாதத்திற்குப் பிறகு, நள்ளிரவு நேரத்தில் திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த மசோதாவிற்கு ஆதரவாக 288 உறுப்பினர்கள் வாக்களித்தனர். எதிராக 232 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
அதனைத் தொடர்ந்து இந்த மசோதா மக்களவையில் கடந்த 3ஆம் தேதி (03.04.2025) அதிகாலை நிறைவேறியது. இதனையடுத்து மாநிலங்களவையிலும் வாக்கெடுப்பு மூலம் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் 128 எம்.பி.களின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு மாநிலங்களவையில் 98 எம்பிக்கள் எதிராக வாக்களித்தனர். இருப்பினும் பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் இந்த மசோதாவிற்கு நிறைவேற்றப்பட்டது. அதாவது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இத்தகைய சூழலில் தான் இந்த மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது ஜாவேத் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து இந்த மசோதாவை எதிர்த்து திமுக சார்பில், அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் வக்ஃப் மசோதா தொடர்பான நாடாளுமன்றக் கூட்டுக்குழு உறுப்பினருமான ஆ. ராசா, மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் எம்.பி மூலம் கடந்த 7ஆம் தேதி (07.04.2025) உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தியிருந்தார். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், வக்ஃப் திருத்தச் சட்டம் 2025ஐ எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.