
காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரும், தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையுமான குமரி ஆனந்தன், இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 92. வயது மூப்பு காரணமாக சுவாசிப்பதில் சிரமப்பட்டு வந்த குமரி அனந்தன், சென்னை வானகரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பல்துறை மருத்துவ குழுவினர் அவரது உடல்நிலையை கண்காணித்து வந்தனர். அதன்பிறகு, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் குமரி அனந்தனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். காமராஜருக்கு நெருக்கமாகவும், அப்பழுக்கற்ற அரசியல்வாதியாகவும், தீவிர காங்கிரஸ்காரராகவும் இருந்த குமரி அனந்தன் யார் என்பதை அலசியபோது அதில் பல்வேறு தகவல்கள் புதைந்திருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலம் என்ற அகத்தீஸ்வரம் பகுதியில், 1933ஆம் ஆண்டு மார்ச் 19ல் பிறந்தவர் குமரி அனந்தன். இவரது தந்தை சுதந்திரப் போராட்டத் தியாகியான அரிகிருஷ்ணன். தாய் தங்கம்மாள். இவர்களுக்கு முதல் மகனாக பிறந்த குமரி அனந்தன், தனது சிறு வயதில் இருந்தே காங்கிரஸ் மீதும் தேசியத்தின் மீதும் மிகுந்த பற்றுகொண்டவராக இருந்து வந்தார். காலப்போக்கில் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டு.. பெருந்தலைவர் காமராஜரின் சீடராக விளங்கிய இவர், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். தனது கட்சிக்காகவும் மக்களுக்காகவும் அரும்பாடுபட்ட குமரி அனந்தன்.. மக்கள் நலனுக்காகப் பதினேழு முறை தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டார். ஏழை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வேண்டுமென்று களக்காட்டிலிருந்து ராதாபுரம் வரை நடைபயணம் மேற்கொண்டு, அதன் விளைவாக 1984-ல் 1.5 ஏக்கர் நஞ்சை நிலம் மற்றும் 2.5 ஏக்கர் புஞ்சை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை பெற்றுத் தந்தார். சிறந்த தமிழ் இலக்கியவாதியான குமரி அனந்தன்.. தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகப் படிவங்கள் அனைத்திலும் தமிழுக்கு முதலிடம் தரப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்.
இதனிடையே, 1977-ம் ஆண்டு நாகர்கோயில் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட குமரி அனந்தன், சட்டமன்ற தேர்தலில் 1980 முதல் 1991 வரை என தொடர்ச்சியாக நான்கு முறை வெற்றபெற்று எம்எல்ஏவானார். தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவரான குமரி அனந்தனுக்கு முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் ‘தகைசால் தமிழர் விருது’ மற்றும் அதற்குரிய பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி சிறப்பித்தார்.
இவர் மறைந்த காங்கிரஸ் எம்பி வசந்தகுமாரின் சொந்த அண்ணன் என்பதும் குறிப்பிடத்தக்கது. குமரி அனந்தனின் மனைவி பெயர் கிருஷ்ணகுமாரி. இந்த தம்பதிகளுக்கு 4 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவரது மகள் தமிழிசை சவுந்தரராஜன் பாஜக மூத்த தலைவராக உள்ளார். தற்போது, குமரி அனந்தனின் மறைவுக்கு முதல்வர் முக ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதோடு, மறைந்த காங்கிரஸ் மூத்தத் தலைவர் குமரி ஆனந்தனுக்கு அரசு மரியாதையுடன் இறுதி மரியாதை செய்யப்பட்டு வடமனியில் உள்ள மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.