
உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகர் மாவட்டம் மாட்ராக் பகுதியைச் சேர்ந்தவர் ஜிதேந்திரகுமார். இவரது மனைவி அப்னா தேவி(40). இந்த தம்பதியிக்கு ஷிவானி என்ற இளம்பெண் ஒருவர் உள்ளார். ஜிதேந்திரகுமார் பெங்களூருவில் தொழில் செய்துவருவதால், உத்தரப்பிரதேசத்தில் உள்ள வீட்டில் தாய் அப்னா தேவியும், மகள் ஷிவானியும் இருந்து வந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஷிவானிக்கு திருமணம் செய்து வைக்க நினைத்த பெற்றோர்கள் ஜார்கண்ட் மாநிலத்தில் வேலை செய்துவரும் ராகுல் என்ற இளைஞரை பேசி முடித்துள்ளனர். ஷிவானிக்கும், ராகுலுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் வரும் 16 ஆம் தேதி இரு வீட்டார் முன்னிலையிலும் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான பத்திரிகைகள் அச்சிட்டு, உறவினர்களுக்கு எல்லாம் கொடுத்து கிட்டதட்ட அனைத்து ஏற்பாடுகளும் முடிந்த நிலையில், மாப்பிள்ளை ராகுலும், மாமியார் அப்னா தேவியும் திடீரென வீட்டில் இருந்து மாயமாகியுள்ளனர். மேலும் வீட்டில் இருந்த வெளியேறிய இருவரும் ஷிவானியின் திருமணத்திற்காக வைத்திருந்த ரூ.3.5 லட்சம் பணத்தையும், ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
வருங்கால மனைவி ஷிவானிக்கு போன் செய்து பேசும் ராகுல், சில நிமிடங்கள் மட்டுமே அவரிடம் பேசுவாராம். மற்றபடி, மணிக்கணக்கில் ஷிவானியின் தாயார் அப்னா தேவியிடம் தான் பேசுவாராம். ஆனால், இதனையெல்லாம் பெரிதாக கண்டுகொள்ளாத ஷிவானி மாமியாரிடம் தானே பேசுகிறார் என்று அலட்சியமாக இருந்திருக்கிறார். இதனைப் பயன்படுத்திக்கொண்ட ராகுலுக்கும், அப்னா தேவிக்கும் இடையே காதல் மலர்ந்து, நெருக்கம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில்தான் கடந்த 6 ஆம் தேதி இருவரும் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதுகுறித்து பேசிய ஷிவானி, ராகுலுக்கும் எனக்கு வரும் 16 ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. கடந்த 4 மாதங்களாகவே ராகுல் எனது அம்மாவுடன் அதிக நேரம் போனில் பேசி வந்தார். தற்போது எனது அம்மா ராகுலுடனே சென்றுவிட்டார். திருமணத்திற்காக நாங்கள் சேர்த்து வைத்த பணத்தில் இருந்து 10 ரூபாய் கூட மிச்சம் வைக்காமல் அனைத்து பணத்தையும் நகைகளையும் எடுத்துச் சென்றுவிட்டார். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும், எங்கு வேண்டுமானாலும் போகட்டும். ஆனால், எங்களுக்கு ரூ.3.5 லட்சம் பணத்தையும், நகைகளையும் திருப்பித் தர வேண்டும் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஜிதேந்திரகுமார், “எனது மனைவியும், ராகுலும் அதிக நேரம் போனில் பேசிவந்தார்கள். இது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் மகளின் திருமணத்திற்கு சில நாட்களே இருப்பதால் அதனை நான் பெரிதுபடுத்தவில்லை. ஆனால் தற்போது எனது மகளின் திருமணமே நின்று விட்டது” என்றார்.