
ஒன்றிய அரசுக்கு எதிராக நடப்புகளை துணிச்சலாக துரைமுருகன் விளாசியது தென்பக்கம் பரபரப்பு டாப்பிக்காயிருச்சு. தி.மு.க.வின் முப்பெரும் விழா தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தலில் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் மைக் பிடித்த அக்கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் துரைமுருகன் நடப்பு சூழல மனசுல வைச்சுக்கிட்டு போட்டுத் தாக்கியிருக்கிறார். அதில், “மத்தியில மக்களால தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி ஒன்றுயிருக்கு. மோடி பிரதமராக உள்ளார். அவருக்குப் பக்கத்திலயிருக்குற அமைச்சர்களுக்கு என்ன வேலை, திட்டம் போடணும், பணம் தரவேண்டும் நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கணும் மக்களுக்கான திட்டங்களைத் தரணும். ஆனா அதை விட்டுட்டு வேறு பணிகளில் ஈடுபடுகின்றனர்.
ஒவ்வொரு மாநிலமும் அவர்களுக்கு அடிமையாக இருக்கணும். அவர்களுக்கு சலாம் செய்கிறவர்கள் அங்கு முதல்வராயிருக்கவேண்டும். அப்படி சலாம் செய்யாதவர்களை தூக்கிவிட வேண்டும் என்பதைச் செய்கின்றனர். நம் ஆட்சியைக் கைப்பற்றுவது அவர்கள் நோக்கம் கிடையாது. தமிழ் கலாச்சாரத்தை அழிப்பது. தமிழர்கள் என்ற உணர்வை மங்கவைப்பது தான் திட்டம். தமிழகத்தில் முதலில் மொழியை அழிக்கவேண்டும். மொழி அழிந்தால் இனம் அழியும் என்பதால் இந்தியைத் திணிக்கப்பார்க்கிறார்கள். மொழியை அழிப்பது பயம் காட்டுவது பட்டினிபோடுவது அவர்கள் திட்டம் எங்களுக்குத் தரவேண்டிய நிதியை கல்வி மற்றும் நூறு நாள் வேலைத் திட்டத்திற்குத் தரவேண்டிய முறையான நிதியைத் தரவில்லை.
இவ்வளவு நிதியைத் தரவில்லை என்றால் முதல்வர் மு.க ஸ்டாலின் என்ன செய்வார் ஐயோ இப்புடிப் பண்ணி விட்டீர்களே?. அரசு திண்டாடும் என்று சொல்வார் என்று எதிர்பார்த்தனர். வேண்டுமென்றால் ஒன்றிய அரசு அனைத்து நிதியையும் நிறுத்தட்டும். தமிழகத்தில் எங்களால் ஆட்சி நடத்த முடியும். அண்ணா கலைஞர் இருவரையும் ஊறவைத்து அரைத்து வைத்து உருவம் செய்தால் அது தான் முதல்வர் மு.க. ஸ்டாலின். எழுதிவைத்துக் கொள்ளுங்கள் அ.தி.மு.க.- பா.ஜ.க. ஒரே அணியில் சேரும், நாங்கள் அனைத்தையும் சமாளிக்கத் தயாராக இருக்கிறோம்” என்று ஓங்கி உறைத்துச் சொன்னது கூட்டத்தினரை உணர்ச்சியாக சிலாகிக்க வைத்தது.