
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கண்ணங்குடியை சேர்ந்தவர் மணிகண்டன்(31). இவருக்கு லாவண்யா(20) என்ற பெண்ணுடன் திருமணமாகி 5 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. குழந்தை பிறப்பதற்கு முன்பு வரை சந்தோஷமாக இருந்ததாகவும், ஆனால் குழந்தை பிறந்த நாளில் இருந்து இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் லாவண்யா குழந்தையுடன் புலியூரில் உள்ள தனது தாயாரின் வீட்டிற்கு வந்து அங்கேயே தங்கியிருந்துள்ளார். இந்த சூழலில் கடந்த 6 ஆம் தேதி இரவு லாவண்யாவின் வீட்டிற்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் புகுந்து கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு குழந்தையை தூக்கிச் சென்றதாக கத்தி கூச்சலிட்டுள்ளார்.
சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அங்கும் இங்கும் சுற்றித் தேடி பார்த்துள்ளனர். அப்போது 5 மாத குழந்தை வீட்டின் அருகே இருந்த தண்ணீர் பேரலுக்குள் சடலமாக கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் கீரனூர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் குழந்தையின் பெற்றோரான மணிகண்டன் - லாவண்யா இருவரிடம் விசாரணை நடத்தினர். முதலில் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்த லாவண்யாவின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் தொடர் விசாரணையில் குழந்தையை நான் தான் கொலை செய்தேன் என்று ஒப்புக்கொண்டார். மேலும், தனது கணவர் குழந்தை பிறந்ததில் இருந்து தன் மீது பாசம் காட்டாமல் குழந்தையின் மீது மட்டும் அதிகம் பாசம் காட்டி வந்தார். அதனால் ஆத்திரமடைந்து குழந்தையை நான் தான் பேரலுக்கு அமுக்கி கொலை செய்தேன் என்று பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.