
விருதுநகர் மாவட்டம் காரிசேரி என்ற இடத்தில் மாரியம்மன் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோயில் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கோயிலுக்கு மைக் செட் அமைக்கும் பணி இன்று (14.04.2025) நடைபெற்று வந்தது. இந்நிலையில் கோயிலுக்கு மைக்செட் அமைக்கும் போது மைக்செட் வயர் அங்கிருந்த உயர் அழுத்த மின்கம்பியின் மீது உரசியதாகக் கூறப்படுகிறது. இதனால் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
அதாவது மைக் செட் வயர் கட்டும்போது உயர் அழுத்த மின்கம்பியில் இருந்து வந்த மின்கசிவு காரணமாக மின்சாரம் தாக்கியதில், மைக் செட் உரிமையாளர் திருப்பதி (வயது 28), அவரது மனைவி லலிதா (வயது 25), திருப்பதியின் பாட்டி பாக்கியம் (வயது 65) ஆகியோர் உயிரிழந்தனர். இந்த விபத்தின் போது விபத்தில் சிக்கிய மூவரையும் காப்பாற்ற அங்கிருந்த இருவர் முயன்றுள்ளனர். இவர்களும் மின் விபத்தில் சிக்கிக் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த லலிதா 5 மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. கோவில் திருவிழா பணியின்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.