
தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திமுகவில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் மேற்கொள்ள ஏதுவாக ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் துணை முதல்வரும், திமுகவின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ. வேலு, தங்கம் தென்னரசு மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதன்படி இந்த குழுவினர் கட்சியில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள், அமைப்பு ரீதியான சீரமைப்புகளைப் பரிந்துரைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே போன்று அதிமுகவில் கட்சி பணிகள் மேற்கொள்ள 82 மாவட்ட பொறுப்பாளர்களை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நியமித்திருந்தார். அதில் முன்னாள் அமைச்சர்களான பொன்னையன், தம்பிதுரை, செம்மலை, வளர்மதி, கோகுல இந்திரா, வைகைச் செல்வன், செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்டவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தான் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பாஜகவுடன் மீண்டும் அதிமுக கூட்டணி வைத்ததற்கு அக்கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் எனப் பலரும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த கே.எஸ். முகமது கனி, அதிமுவின் சிறுபான்மை பிரிவு நகரச் செயலாளர் பதவியில் இருந்தும், அதிமுகவில் இருந்து விலகுவதாகப் பரபரப்பு தகவலைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அக்கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் சி. விஜயபாஸ்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “நான் கடந்த 45 ஆண்டு காலமாக அதிமுகவில் பல பொறுப்புகளிருந்து பணியாற்றியுள்ளேன். சிறுபான்மையின மக்களுக்கு எதிராகப் பாசிச பாஜகவுடன் (பிஜேபி) கூட்டணி வைத்ததை அடுத்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு மற்றும் அனைத்து பதவிகளிலிருந்தும் ராஜினாமா செய்கிறேன். இப்படிக்கு புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித் தலைவி அம்மாவின் உண்மை விசுவாசி” எனத் தெரிவித்துள்ளார். இது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.