
சென்னை கலைவானர் அரங்கத்தில் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளான சமத்துவ நாள் விழா தமிழ்நாடு அரசு சார்பில் இன்று (14.04.2025) நடைபெற்றது. இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகளைப் பயனாளிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கருடைய பார்வை நம் அனைவருக்கும் வேண்டும். அதற்காகத் தான், அண்ணல் அம்பேத்கருடைய பிறந்த நாளை இன்றைக்குச் சமத்துவ நாளாகக் கொண்டாடுகின்றோம்.
முன்னாள் முதல்வர் கலைஞர், இந்தியாவிலேயே முதன் முறையாகச் சென்னை சட்டப் பல்கலைக்கழகத்திற்கு அண்ணல் அம்பேத்கருடைய பெயரினைச் சூட்டி அழகு பார்த்தார். அண்ணல் அம்பேத்கருக்குச் சென்னையில் மணி மண்டபம் கட்டியதும் கலைஞர் தான். இன்றைக்குக் கலைஞர் வழியில், அண்ணல் அம்பேத்கருடைய லட்சியங்களை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருப்பவர் தான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். பட்டியலின பழங்குடியின மக்கள் சமூக ரீதியாக விடுதலை பெற வேண்டும். அதுமட்டுமல்ல, பொருளாதார விடுதலையையும் அவர்கள் அடைய வேண்டும். அதற்காகத் தான் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் போன்ற திட்டங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்படுத்தி வருகின்றார். பட்டியல் இன பழங்குடியின மக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவும், ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது தமிழக அரசு.
ஆகவே அண்ணல் அம்பேத்கர், எந்த லட்சியத்திற்காக உழைத்தார்களோ, அந்த லட்சியத்தை அடைவதற்கு அனைவரும் ஓரணியில் நின்று உறுதியுடன் பயணிப்போம்” எனப் பேசினார். இந்த விழாவில் அமைச்சர்கள் எ.வ. வேலு, மா. மதிவேந்தன், சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, பிரகாஷ் அம்பேத்கர், வி.சி.க. தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன். நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே. ராஜாராமன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் க. லட்சுமிபிரியா எனப் பலரும் கலந்து கொண்டனர்.