
இந்தியில் சமூக சீர்திருத்தவாதி ஜோதிராவ் புலேவின் வாழ்க்கை வரலாறு ‘புலே’ எனும் தலைப்பில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஜோதிராவ் புலேவாக ‘ஸ்கேம் 1992’ வெப் தொடரில் நடித்து பலரது கவனத்தை ஈர்த்த பிரதிக் காந்தி நடித்துள்ளார். இதையடுத்து ஜோதிராவ் புலே மனைவியான சாவித்ரிபாய் புலேவாக வளர்ந்து வரும் நடிகையான பத்ரலேகா நடித்துள்ளார். இப்படத்தை டான்சிங் சிவா பிலிம்ஸ் மற்றும் கிங்ஸ்மென் புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்க ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தை ஆனந்த் நாராயன் மகாதேவன் இயக்கியுள்ளார். இவர் நடிகரும் கூட. தமிழில் ரிதம், பாபநாசம், 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
‘புலே’ படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகியிருந்தது. அதில் தங்களை தவறாக சித்தரித்துள்ளதாக பிராமண சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்து மகாசங்கத்தின் தலைவர் ஆனந்த் டேவ், “டிரெய்லரில் ஒரு பிராமண சிறுவன் சாவித்ரிபாய் புலே மீது மாட்டுச் சாணம் வீசுவது போல் காட்சி வருகிறது. இதை நாங்கள் எதிர்க்கவில்லை, ஆனால் ஜோதிராவ் புலே முதல் பள்ளியைத் திறப்பதற்கு பிராமணர் தான் வீட்டைக் கொடுத்தார். அதையும் டிரெய்லரில் காட்ட வேண்டும். பிராமணர்கள் செய்த கெட்ட விஷயங்களை மட்டும் காட்டுவது நியாயமற்றது. டிரெய்லர் ஒரு தலை பட்சமாக இருக்கக்கூடாது” எனக் கூறியிருந்தார்.

இதையடுத்து தணிக்கை குழு வாரியம் படத்தில் இருந்து சாதி பெயர்களை நீக்க கோரியது. மேலும் டிரெய்லரில் இடம் பெற்ற அந்த சிறுவன் மாட்டு சாணத்தை தூக்கி அடிக்கும் உள்ளிட்ட சில காட்சிகளையும் நீக்க கோரி ‘யு’ சான்றிதழ் வழங்கியது. இதற்கு அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், தேசியவாத காங்கிரஸ் கட்சி மஹாராஷ்டிரா மாநில தலைவர் ஜெயந்த் பட்டில் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இப்படம் ஜோதி ராவ் புலேவின் 198வது பிறந்தநாளான நேற்று(11.02.2025) வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென இப்படம் வருகிற 25ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்தது. இதனால் பிரமாண சமூக எதிர்ப்பால் படம் தள்ளிப்போனதா இல்லை சென்சார் போர்டு விஷயங்களால் தள்ளிப் போனதா என்ற கேள்விகள் எழுந்தது. இந்த நிலையில் படத்தின் இயக்குநர் ஆனந்த் நாராயன் மகாதேவன், பிராமண சமூக எதிர்ப்பால் தான் படம் தள்ளிப் போனது என விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது, “சென்சார் போர்டு அதிகாரிகள் படத்தில் சில திருத்தங்களை செய்யச் சொல்லி பரிந்துரைத்தார்கள். அது தொடர்பானவை கட் செய்யப்படவில்லை. படத்தை இளைஞர்கள் மற்றும் அனைவரும் பார்க்க வேண்டும் என்று அதிகாரிகள் நினைத்தார்கள். அது நல்ல விஷயம். ஆனால் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது எதனால் என்று எனக்கு புரியவில்லை. அது தேவையற்றதாக நான் நினைக்கிறேன். பிராமணர்கள் இரண்டு நிமிட டிரெய்லரை பார்த்து விமர்சிக்கிறார்கள். படத்தில் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் எதுவும் இல்லை. இந்த சர்ச்சையை தீர்க்க படம் வெளியீடு செய்யும் நபர்களை சந்தித்து படம் வெளியீடு தொடர்பாக பேசி படத்தை தள்ளி போக முடிவெடுத்தோம்.

ஒவ்வொருவரும் படம் குறித்த கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் பிராமணர்கள் எதிர்ப்பு தெரிவிக்க அவர்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என இன்னும் சிலர் கேட்கிறார்கள். இதனால் இரு தரப்பினருக்கும் மோதல் போக்கு நீடித்த நிலையில் அவர்களை அமைதியாக்க முயற்சித்தோம். படத்தில் அவர்கள் சண்டை போடும் அளவிற்கு ஒன்னும் இல்லை என அவர்களுக்கு சொல்ல நினைத்தோம். நாங்கள் ஆடியன்ஸ்களை இழக்க விரும்பவில்லை. அதனால் அவர்கள் ஒன்று சேர்ந்து அமைதியாக படம் பார்க்க விரும்பினோம். அதனால் தயாரிப்பாளரும் விநியோகஸ்தர்களும் ஒன்று கூடி சர்ச்சை முடிய சில நாட்கள் எடுக்கும் என்பதால் படத்தை தள்ளி போட்டோம்” என்றார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் பிறந்த ஜோதிராவ் புலே, சாதி ஏற்றத்தாழ்வுகள் அதனால் ஏற்பட்ட கல்வி மறுப்பு, பெண்ணடிமைத்தனம், பெண்களின் கல்வி மறுப்பு, கணவனை இழந்த சிறுமிகள் சாஸ்திரங்களின் பெயரால் கல்வி மறுக்கப்பட்டது ஆகிய விஷயங்களுக்காக போராடினார். அதற்காக அவரும் அவரது மனைவியும் பல முன்னெடுப்புகளை எடுத்தனர். இந்தியாவின் முதல் மகாத்மா என்று ஜோதிராவ் புலே அழைக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.