Skip to main content

ஹார்வர்ட் பல்கலைக்கழக தமிழ்  இருக்கையால் என்ன நன்மைகள்?

Published on 11/02/2018 | Edited on 12/02/2018

ஹார்வர்டு தமிழ் இருக்கை செயல்பாட்டுக்குழுவின் இந்தியாவுக்கான ஒருங்கிணைப்பாளரான  முனைவர் ஆறுமுகம் பேட்டி 

ஹார்வர்ட் பல்கலைக்கழகம், உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகமாக அறியப்படுகிறது.  அங்கு நடக்கும்  ஆராய்ச்சிகளும், அங்கிருந்து வெளிவரும் மாணவர்களின் செயல்பாடுகளும்    உலகின் வாழ்வியலில், பொருளாதாரத்தில், இலக்கியத்தில் பெரும் தாக்கத்தை  ஏற்படுத்திவருகின்றன. அந்த ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உலகின் ஏழு செம்மொழிகளான  சீன, கிரேக்க, ஹீப்ரூ, லத்தீன், பெர்சிய. சம்ஸ்கிருத, தமிழ் மொழிகளில் தமிழைத் தவிர பிற  மொழிகளுக்கென இருக்கைகள் இருக்கின்றன. அம்மொழிகளை அடிப்படையாகக் கொண்டு  பண்பாடு, மருத்துவம், கலைகள் ஆகியவற்றில் ஆராய்ச்சிகள் நடக்கின்றன. தமிழ், தமிழன் என்ற  உணர்வு ஓங்கி ஒலிக்கும் இந்த நேரத்தில், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை  அமைக்க சிலர் துவங்கிய முயற்சி இன்று பரவலாக அறியப்பட்டு, தமிழக அரசும்  அதற்கு பத்து கோடி நிதி அறிவித்துள்ளது. மொத்தத் தேவை 40 கோடி ரூபாயாகும். சில பல  திட்டங்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும்  பல நூறு கோடிகள் செலவழிக்கப்படுகின்றன. 'ஆளப்  போறான் தமிழன்' என்று பாடி திரைப்படங்கள் நூறு கோடிகளுக்கு மேல் வசூலிக்கின்றன. இந்த  நிலையில் முக்கியமான இந்த செயல்பாட்டுக்கு சிலர் மட்டும் சிரமப்பட்டு நிதி திரட்டுகின்ற  நிலை, இருக்கை அமைக்கப்பட்டால் என்னென்ன நன்மைகள், எதற்காக இது என்பது உள்ளிட்ட நம் சந்தேகங்களை  ஹார்வர்டு தமிழ் இருக்கை செயல்பாட்டுக்குழுவின் இந்தியாவுக்கான ஒருங்கிணைப்பாளரான  முனைவர் ஆறுமுகத்திடம்   கேட்டோம்...   

 

hardvard university

 
ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தமிழ் இருக்கைக்கான மொத்தத் தொகையையும் நாம என்னைக்குள்ள கொடுக்கணும்? 

மொத்த  இலக்கு ஆறு மில்லியன் டாலர். ரூபாய் மதிப்புல  கிட்டத்தட்ட 40 கோடி. அதையும் ஜூன் 2018க்குள்ள நாம கொடுத்தாக  வேண்டியிருக்கு. அதுக்குள்ள கொடுப்போம்ங்குற நம்பிக்கை ஒளிமயமா இருக்குங்க.  

தமிழகத்துல இதற்கான ஆர்வம் எப்படி இருக்கு?
தமிழ்நாட்டுல இதுவரைக்கும் பெரிய ஆர்வம் எதுவும் இல்ல. அதுக்கு ரெண்டு  காரணங்கள் இருக்கு. ஒன்னு நம்ம மக்கள் பணமா உதவ  முடியாது. ஹார்வர்ட்  பல்கலைக்கழகத்துக்குதான்  நேரடியா அனுப்ப முடியும். இந்த  பிரச்சனையாலதான்  கொடுக்கணும்னு நெனைக்குறவுங்க கூட பேங்க் போய் அனுப்ப வேண்டிய  சூழ்நிலையால்  கொடுக்காம விட்டிருக்கலாம். இதுபற்றிய விழிப்புணர்வுவந்து இன்னும் மக்களை  முழுசா  சென்றடையல. அதுக்காகத்தான் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கோம்.  


 

hardvard university


தமிழக அரசு மிகப்பெரிய திட்டங்களையெல்லாம் செயல்படுத்திட்டு இருக்கு.  அப்படியிருக்கும்போது  40 கோடிங்குறது  கொடுக்கக்கூடிய ஒரு தொகைதானே? 
அவுங்க என்ன குறிப்பிட்டாங்கன்னா 'இப்போதிருக்குற நிதி நிலமைல 10 கோடி  தான் கொடுக்க முடியும், அதுக்கு பிறகு நாங்க உங்களோட சேர்ந்து வேற முயற்சிகள் செய்ய  தயாரா இருக்கோம்'னு  சொல்லிருக்காங்க.  

ஹார்வர்ட் பல்கழைக்கழகத்துல தமிழ் இருக்கை ஏற்படுத்தப்பட்டால்  விளையும் நன்மைகள்  என்னென்ன?  
நம்ம தமிழ்மொழி மாதிரி வளமான மொழி, பழமையான மொழி உலகத்துல வேற  எங்கயுமே இல்ல. இப்போ தமிழ்மொழி சிறந்த மொழின்னு தமிழ் பல்கலைக்கழகமோ, மெட்ராஸ்  பல்கலைக்கழகமோ சொன்னாங்கன்னா யாருமே ஏத்துக்க மாட்டாங்க. காரணம்  அவுங்கவுங்க ஊரப்  பத்தி அவுங்கவுங்க நல்லாதான் பேசுவாங்க. ஆனா ஹார்வர்ட்  பல்கலைக்கழகம்  உலகத்துலயே ஒப்புயர்வற்ற உயர்ந்த பல்கலைக்கழகம். 350 வருடமா   நடந்துட்டு இருக்கு. அதனால அங்க இருந்து ஒரு செய்தி வந்தா அத உலகமே ஏற்றுக்கொள்ளும்.  ஒரு உதாரணம் என்னனா  கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்கு முன்னாடி ஹார்வர்ட்   பல்கலைக்கழகம்  'யோகா ஒரு சிறந்த தியானம், உடலுக்கு உகந்தது,  உடலுக்கும், மனதுக்கும், ரொம்ப பலனுள்ளதா இருக்கும்'னு  ஒரு அறிக்கை போட்டாங்க. அந்த அறிக்கை வந்தபிறகு  உலகமே யோகாவைப்   பத்தி யோசிச்சாங்க. அதுவரைக்கும் கிட்டத்தட்ட 300 ஆண்டுகளா  இருக்குற யோகாவ யாருமே திரும்பி பாக்கல. ஹார்வர்ட் சொன்ன பின்பு எல்லாருமே அத  பயன்பாட்டுக்கு கொண்டுட்டு வந்தாங்க. இதுலயே நீங்க புரிஞ்சுக்கலாம்,  ஹார்வர்ட்  எவ்ளோ  பவர்ஃபுல்(powerful) ஆனதுனு. தமிழ்நாட்டுல  தமிழ் இயற்கை மருத்துவம் இருக்கு, சித்தமருத்துவம்  இருக்கு, தமிழ் களஞ்சியம் இருக்கு, தமிழ் இலக்கியம் இருக்கு, இதுமட்டுமில்லாத செம்மையான  பல விஷயங்கள் இருக்கு.  இதெல்லாம் எப்படி வெளிக்கொண்டுவர முடியும்? அத  வெளியேகொண்டு வரணும்னா ஒரு மீடியம்(medium) தேவை. அந்த மீடியம், ஹார்வர்ட்  பல்கலைக்கழகம். அவுங்க 'சித்தமருத்துவத்த பத்தி ஒரு ஆராய்ச்சிக்  கட்டுரையா  போட்டாங்கன்னா  அப்புறம் டெல்லியும் சொல்லவேணாம், யாரும் சொல்ல வேணாம், உலகமே  அத ஏத்துக்கும். இதெல்லாம் நாங்க கருத்துல கொண்டுதான்,  எப்படியாவது தமிழுக்கு ஒரு  பெரிய அரியணையை  ஏற்படுத்தணும்ங்குற வேகத்துல பண்ணுறோம்ங்க. இதுக்காக பட்ட  தொல்லை இதுக்காக பட்ட பாடு நிறைய. பலபேரை  போய் சந்துச்சுருக்கேன்...  உலகம் பூரா  சுத்தியிருக்கோம். கை காசெல்லாம் செலவு பண்ணி பண்ணோம். இப்போ ஒரு நல்ல  நிலைமைக்கு வந்துருக்குங்க. மீடியா ரொம்ப ஹெல்ப் பண்ணாங்க. எல்லா காலத்துலயும் வந்து  மீடியாவுக்கு நான் ரொம்ப நன்றி உள்ளவன்.  

தொழிலதிபர்கள், பிரபலங்கள்  இந்த விஷயத்துல எவ்வளவு  பங்களித்தார்கள்?  
எங்க போர்டுல(board) பால்பாண்டி ஐயாங்குறவரு அமெரிக்காவுல இருக்காரு.  அவரு கிட்டத்தட்ட ஒரு ஒன்றரை கோடி கொடுத்துருக்காரு. டாக்டர்கள்  ஜானகிராமன், சம்மந்தம் ஆகியோர் ஒரு மில்லியன் டாலர்கள் கொடுத்துள்ளனர். பிறகு நாங்கள் மற்றும் உலக தமிழர்களெல்லாம் சேர்ந்து இரண்டு மில்லியன் கொடுத்துருக்கோம். இப்போ தமிழக அரசு 1.5 மில்லியன் குடுத்துருக்கு. தமிழக அரசு  நடிகர் சூர்யா, தன் அகரம் ஃபவுண்டேஷன் மூலமாக ஒரு நிகழ்ச்சி நடத்தி மூன்று லட்சம் நிதி  திரட்டித்தந்தார். அதன்பின் கமலஹாசன் 20 இலட்சம் ரூபாயும், வைரமுத்து 5 இலட்சம் ரூபாயும், தி.மு.க. சார்பில் சில நாட்களுக்கு முன்பு ஒரு கோடி வழங்கப்பட்டது. இன்னும் பலரும் இதற்காக நிதி கொடுத்திருக்காங்க. ஆக 5.8 மில்லியன்  இதுவரைக்கும் வந்துருக்கு. இன்னும்  நமக்கு தேவை 0.2 மில்லியன் மட்டுமே...     

 

hardvard university

ஜோனதன்  ரிப்ளி என்ற   ஹார்வர்ட் பல்கலைக்கழக மொழியியல் அறிஞர்,  'நான் இதே  ஹார்வர்ட்டில்  18 மொழிகளை  கற்றறிந்துள்ளேன், தமிழ் இத்துணை இனிமையான  மொழியென்று முன்பே தெரிந்திருந்தால்   தமிழையே முதல் மொழியாக கற்றிருப்பேன்'னு  சொல்லியிருக்கிறார்.   அங்க இருப்பவர்கள்  தமிழ் மொழி மேல எவ்வளவு  ஈடுபாடா இருக்காங்க? 

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துல தமிழ அறிமுகப்படுத்திட்டாங்கனா எல்லாரும் போய் தமிழ்  படிக்க ஆரம்பிச்சுருவாங்க. விளையாட்டுக்கில்ல, எங்க சிறப்பிருக்குனு தெரிஞ்சுக்கிட்டா அவன்  ஓடிப்போய் அதுக்கு நிப்பான். நாமதான் சிறப்ப பாத்தா தள்ளி ஓடுறோம். தமிழ் பேசாம மத்த  மொழியை பேசி, பெரிய ஆளா  காட்டிக்குறோம், ஏன்னா இங்க இப்படியிருக்கு, நம்ம தமிழ்  மொழில எல்லாமே இருக்கு. அதனால அதோட அருமை தெரியல, நாம அத மதிக்குறதே இல்ல.  மத்தவனுக்கு அது இல்ல, அவன் ஓடிவந்து கத்துக்குவான். ஆக இது உலக மொழியா ஆகிவிடும்.  அப்படி ஆக்கணும்ங்குறதுதான் எங்களோட ஆசைங்க. 

தமிழுணர்வுடன் வாழ்பவர்களும், தமிழுணர்வால் வாழ்பவர்களும் சற்று கவனித்தால் மிக  எளிதாக ஹார்வர்டில் தமிழுக்கென ஆசனம் கிடைக்கும், கிடைத்தால் தமிழ் மொழியே அதை  அரியாசனமாக்கி அமரும்.   'harvardtamilchair.org' என்ற வலைத்தளத்தில் இதன் விவரங்களும், இதற்கு  பங்களிப்பதற்கான வழிமுறையும் இருக்கின்றன.