Skip to main content

பீகார் வாத்தியாரின் திரைக்கதைக்கு ஏற்ப மு.க.ஸ்டாலினின் அரசியல்! -திமுகவை வசைபாடி கே.டி.ராஜேந்திரபாலாஜி அறிக்கை!

Published on 17/06/2020 | Edited on 17/06/2020
K. T. Rajenthra Bhalaji

 

கரோனா ஒழியும் காலம் வரையிலாவது மக்கள் நலன் கருதி, அரசியல் ரீதியாக மு.க.ஸ்டாலின், தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என,  தமிழக  பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அறிக்கை வெளியிட்டுள்ளார். 

உலகளாவிய தொற்று நோய் பேரழிவு என்று உலக நாடுகளாலும், உலக சுகாதார அமைப்பாலும் பிரகடனம் செய்யப்பட்ட கொள்ளை நோய் கரோனாவுக்கு எதிராக, மனிதகுலமே பெரும் போராட்டத்தை நிகழ்த்தி வருகிறது. 

அதிலும், குறிப்பாக மருத்துவ உட்கட்டமைப்பில் மிகவும் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின், இஸ்ரேல், இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளே ஆச்சரியப்படும் விதத்தில்,  கரோனாவுக்கு எதிராக இந்திய தேசம் இடையறாது போராடி வருகிறது. 

அப்படிப்பட்ட இந்திய நாடே,  தமிழகத்தை மனமுவந்து பாராட்டும் வகையில், எளிமை சாமானியர் எடப்பாடியாரின் அரசு நோய் தடுப்பிலும், கரோனாவை குணப்படுத்துவதிலும், கரோனாவினாலான மரண சதவீதத்தை உலகிலேயே குறைவான சதவீதத்திற்குள் நிறுத்தியதிலும், இந்தியாவிலேயே நாளொன்றுக்கு சுமார் 15 ஆயிரம் கரோனா பரிசோதனைகளை நடத்துவதிலும், அதற்கான கரோனா பரிசோதனை கூடங்களை இந்தியாவிலேயே அதிகளவில் அமைத்ததிலும் என நாட்டுக்கே வழிகாட்டும், திறமைமிக்க மாநிலமாக தமிழகத்தை முன்னெடுத்து வருகிறார், உழவன் வீட்டில் உதித்த ஒப்பில்லா முதல்வர் எடப்பாடியார். 

அதே வேளையில் அரசியல் கடந்து இனம், மொழி, சாதிகளை மறந்து கொள்ளைநோய் கரோனாவை ஒழித்து கட்டிட ஓரணியில் திரண்டு, ஓர் கோட்டில் உழைக்கிறது,  இம்மண்ணில் வாழ்கிற ஒட்டுமொத்த மானுட சமூகம். 

ஆனால் இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளுக்கும் மாறாக கரோனாவிலும் அரசியல் செய்து மக்களை குழப்பியும், இரவு, பகல் பாராது உழைக்கும் மருத்துவர்களை, செவிலியர்களை வருவாய் துறையினரை, காவல் துறையினரை, ஒட்டுமொத்தத்தில் மக்களுக்காக அரும்பாடுபடும் அரசு ஊழியர்களையெல்லாம் மனச்சோர்வு அடையச் செய்யும் வகையிலும், மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் உருவாக்கும் நோக்கத்திலும் எதிர்க்கட்சியான தி.மு.க. அதர்மத்தின் வழியில் அரசியல் செய்து அக்கிரமம் புரிந்து வருகிறது. 

கரோனா பரவலின் தொடக்கத்திலேயே சட்டமன்றத்தை நடத்தக்கூடாது, கரோனா பரவி விடும் என்று பேரவையை புறக்கணித்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், அன்றைய தினமே வடசென்னையில் 2000 பேரோடு போராட்டம் ஒன்றில் கலந்து கொண்டார்.

அதுமட்டுமின்றி, கரோனா பரவலின்போது டெல்லி மாநாடு செல்பவர்களுக்கு  அறிவுரை சொல்லி, தொற்றிலிருந்து காப்பாற்றாமல்  பொள்ளாச்சி  நாடாளுமன்ற  தொகுதி திமுக எம்.பி. உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்து  உதவி  செய்வதுபோல் நடித்து  தொற்று பரவ காரணமாக இருந்தும், அதன் தொடர்ச்சியாக கோயம்பேடு மார்க்கெட்டில் கரோனா தொற்று பரவிடச் செய்ததிலும்,  சிறுபான்மையின இஸ்லாமிய மக்கள் மீது  அவசியமற்ற கரோனா பரவல் பழியை போடும் வகையில் இஸ்லாமிய மக்களை கரோனா நோய் தொற்று காலத்திலும் திட்டமிட்டு போராட தூண்டியதும் ஸ்டாலின்தான். 

ஆனால், டெல்லி மாநாடு சென்று திரும்பியதில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய சகோதரர்களை தாயின் பரிவோடு அரவனைத்து அவர்களுக்கு வேண்டிய மருத்துவ வசதி உட்பட அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்து, அவர்களையும், அவர்களது குடும்பத்தையும் பாதுகாத்தவர் தமிழக முதல்வர்  எடப்பாடியார்தான். 

உலகமே வலியுறுத்தும் சமூக விலகலை மக்களிடையே வலியுறுத்துவதற்கு மாறாகவும், “வீட்டில் இரு, விலகி இரு, விழிப்பாய் இரு” என்கிற தமிழ்நாடு முதலமைச்சரின் அழைப்புக்கு நேர் எதிராகவும் ஒன்றிணைவோம் வா”  என்று, ஒவ்வாத வசனத்தைப் பேசியதோடு, மக்களுக்கு நிவாரணம் வழங்குகிற தன்னார்வலர்களும், தனவந்தர்களும், அரசின் மூலம் வழங்கலாம் அதன் மூலம் சமூக இடைவெளி குறையாத நிலையை பாதுகாப்போடு மேற்கொள்ளலாம் என தமிழக அரசு கொண்டுவந்த கட்டுப்பாட்டுக்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்று அனுமதி வாங்கியதோடு, கண்டெய்ன்மெண்ட் ஜோன், ஹாட்ஸ்பாட் என நோய் பரவல் அதிகமுள்ள பகுதிகளாக அரசால் அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு வளையம் அமைத்த பகுதிகளுக்குச் சென்று நிவாரணம் வழங்குகிறோம் என்ற பெயரிலே மக்களிடையே கொரோனாவை பரப்பி இன்றைக்கு ஒட்டுமொத்த சென்னை மக்களின் நிம்மதியை கெடுத்ததும், சென்னையிலிருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் செல்வோரால் பல மாவட்டங்களில் மீண்டும் நோய்த்தொற்று பரவும் அபாயத்திற்கும் காரணமே, கொரோனாவை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் ஸ்டாலினின் அதிகார வெறிதான். 

அபவாதம் செய்து “ஒன்றிணைவோம் வா” என அரசுக்கு எதிராக தன் கட்சியினரை தூண்டி விட்டு ஸ்டாலின் நடத்திய அத்துமீறல்களால்தான் இன்று அவரது கட்சியை சார்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரையே கரோனாவுக்கு பலிகொடுக்க வேண்டிய பரிதாபம் நிகழ்ந்ததோடு, இன்னும் பலருக்கு கரோனா பரவிடவும் காரணமாகி விட்டது. 

ஜெயலலிதா,  தான் வாழும் காலத்தில் அறுதியிட்டு, உறுதிபடச்  சொன்னதுபோல் மு.க.ஸ்டாலினிடம் குவிந்துகிடக்கும் ஒரு லட்சம் கோடிக்கும் மேலான கொள்ளை பணத்தை கொண்டு தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி செய்து விடலாம். மேலும், அதன் தலைமையும், ஏழைகளுக்கு கொடுத்ததாக சொல்லப்படும் சொற்ப நிவாரணத்தைக் கூட சென்னையில் உள்ள பாண்டிபஜாரின் பல பகுதிகளிலும் உள்ள வணிக நிறுவனங்களிடம் மிரட்டி வசூலித்தே வழங்கியிருக்கிறார்கள் என்பதெல்லாம் இப்போது அம்பலத்திற்கு வந்து சந்தி சிரிக்கிறது. 

இவ்விவரங்களையெல்லாம் திமுகவை காறித் துப்பிவிட்டு அக்கட்சியிலிருந்து விலகியிருக்கும், மூத்த திமுக பிரமுகரும், முன்னாள் விவசாய அணி செயலாளருமான கே.பி.ராமலிங்கம் அம்பலப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

இப்படி இந்தியாவில் மட்டுமல்ல உலகிலுள்ள எந்தவொரு அரசியல் கட்சியும், குறிப்பாக ஆளும் கட்சிக்கு நிகரான பொறுப்புணர்வு கொண்ட எந்த ஒரு எதிர்க்கட்சியும் இது போன்ற கேவலமான அரசியலை நடத்தி, அதிகார போதையில் அலைந்ததில்லை என்பதே உண்மை. 

அடாவடி வசூல் செய்து நிவாரணம் தருகிறோம் என்று திமுக நடத்துகிற மோசடிகள் ஒருபுறத்தில் என்றால் மறுபுறத்திலோ, மக்களிடம் வாங்கிய மனுக்களை ஒப்படைப்பதாக தலைமைச் செயலாளர் தொடங்கி மாவட்ட ஆட்சியர் வரை திமுக எடுத்துவிட்ட ரவுடித்தனங்களும், தன்கட்சி உறுப்பினரையே ஒன்றிணைவோம் வா என்று கொன்றுபோட்ட கொடுமையும், மாணவர்களை வைத்து மலிவான அரசியல் நடத்துவதும், மதுக்கடைகளுக்கு எதிராக போராடுகிறோம் என்று திமுகவின் மதுபான ஆலை அதிபர்களோடு கூடி போராட்டம் என்ற பெயரிலே நடத்திய கேலிக்கூத்துகளும்,  சில ஜாதிகளின் பிரிவைக் குறிப்பிட்டும், நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா என்றும், நாங்கள் போட்ட பிச்சை என்றும்,  ஆண்டான் அடிமை காலத்தோடு வழக்கொழிந்துபோன வார்த்தைகளால் பட்டியலினத்து மக்களை இழித்துப் பேசியது வரை,  அத்தனை அசிங்கங்களுக்கும் காரணம் திமுக தலைவர் ஸ்டாலினின் அதிகார வெறிபிடித்த நாற்காலி பித்துதான். 

இதனைக் கண்டு உலகமே முகம் சுளிக்கும் வேளையில் திமுக தலைவரும், அவரது குடும்பமும், அந்த குடும்ப கட்சிக்கு காவடி தூக்குகிற அரசியல் சுயநலவாதிகளும், ஒன்று சேர்ந்து கொண்டு நாட்டுக்கே இலக்கணமாக நல்லாட்சி நடத்துகிற எங்கள் வெள்ளந்தி முதல்வர், விவசாயிகளின் தோழர், நல்லாட்சி இலக்கணத்தால் ஏராள விருதுகளை நற்றமிழ் பூமிக்கு வென்று வந்த அம்மாவின் தூய வழி தொண்டர் மீது அடுக்காத பழிகளையும், அவதூறுகளையும், பீகார்வாத்தியார், பின்னணியில் இருந்து அமைத்துக் கொடுக்கும் திரைக்கதைக்கேற்ப திமுக தலைவர் ஸ்டாலின் நடத்துகிற அரசியல் பித்தலாட்டங்கள் அருவருப்பின் உச்சமாகும்.

தேன்தமிழ் அறப்பணி, தெய்வீக திருப்பணியோடு திரைகடலோடி திரவியம் தேடுகிற உன்னத முதல்வர் மீது, குடிமராமத்து பணிகளால் கரிகாலன் காலத்தை கண்முன்னே நிறுத்துகிற கடமை காவலர் மீது, கொரோனா காலத்திலும் 47 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க சுமார் 15 ஆயிரம் கோடியிலான 17 உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு அவற்றை தொடங்கிடும் தூயவர் மீது அவதூறுகளையும்,பழிகளையும் சுமத்தி மலிவான அரசியலில் ஈடுபடும் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் திமுகவை தடயமின்றி அழிக்கப்போகிறது என்பது நிச்சயம் இதனை திமுகவில் உள்ள மனசாட்சி படைத்த தொண்டர்களுமே வெறுக்கிறார்கள் என்பது உண்மை, இதற்கு திமுகவிலிருந்து அடுத்தடுத்து வெளியேறுகிற மூத்த நிர்வாகிகளே சாட்சி. 

எனவே, இனியாவது திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக அரசுக்கு எதிராக, நரி சூழ்ச்சி செய்வதையும், பீகார்காரர்  கொடுக்கும் பினாமி அறிக்கைகள் விடுவதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டு அரசியலிலிருந்து தன்னை அவர் குறைந்த பட்சம் கரோனா ஒழியும் காலம் வரையிலாவது மக்கள் நலன் கருதி அரசியல் ரீதியாக தன்னை தனிமைப் படுத்திக் கொள்வதே தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் செய்கிற பேருதவியாகும். 

பயணம் செய்கிற ரயிலுக்கு, நான்கு ரூபாய் 50 பைசா கொடுத்து திருவாரூரிலிருந்து சென்னைக்கு டிக்கெட் எடுக்கவே வழியில்லாத நிலையில், பொதுவாழ்விற்கு வந்து, இன்று உலகப் பணக்காரர்களோடு போட்டி  போடும் அளவிற்கு,  ஒரு லட்சம் கோடிக்கு ஆஸ்திகளைக் குவித்து வைத்திருக்கும் ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களுக்கு செய்கிற ஒரே நன்மை,  தன்னை அவர் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு, தனது அறிக்கையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக குறிப்பிட்டிருக்கிறார் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. 

 

சார்ந்த செய்திகள்