
தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் சென்னை வருகையின் போது தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் பதவி மாற்றப்பட்டு நயினார் நாகேந்திரனுக்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர், எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவும் பா.ஜ.கவும் கூட்டணி அமைத்து போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்த கூட்டணி அறிவிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்பட கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “பா.ஜ.க அதிமுகவை உருட்டி மிரட்டி பணிய வைத்து கூட்டணி அமைத்திருப்பதாக அமித் ஷாவே அறிவிக்கிற நிலையை தான் நாம் பார்த்தோம். கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று அதிமுக தலைமை அறிவிக்கவில்லை. அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்திருக்கிற பா.ஜ.கவின் தலைவர் இதை அறிவிக்கிறார். அப்படி என்றால் அதிமுக தலைமையிலான கூட்டணியா? பா.ஜ.க தலைமையிலான கூட்டணியா? என்ற சந்தேகம் எழுகிறது. பத்திரிகையாளர்களை அழைத்தது பா.ஜ.க, கூட்டணியை அறிவித்தது பா.ஜ.க, கூட்டணி ஆட்சி என்று அறிவித்திருப்பது பா.ஜ.க. இதில் அதிமுகவின் பங்கு என்ன என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
அதிமுக தொண்டர்கள் இதை மனப்பூர்வமாக ஏற்க வாய்ப்பில்லை என்று தான் நான் நம்புகிறேன். இந்த கூட்டணி ஏற்கெனவே உருவான கூட்டணி, மக்களால் புறக்கணிக்கப்பட்ட கூட்டணி. எனவே, இந்த கூட்டணியால் தமிழகத்தில் எந்த தாக்கமும் ஏற்படாது. அதிமுகவுக்கு ஏதோ நெருக்கடியை பா.ஜ.க கொடுத்திருக்கிறது, அந்த அடிப்படையில் இந்த கூட்டணி உருவாகியிருக்கிறது என்று யூகிக்க முடிகிறது” என்று கூறினார்.