
மதிமுக கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மதிமுக தொழிற்சங்க பொதுக்குழு கூட்டம் இன்று (12-04-25) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும், சாதி அடிப்படையில் பதவிகள் வழங்கப்படுவதாக நிர்வாகி ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்ற நிர்வாகிகள் ஒருவருக்கு ஒருவர் இடையே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த இடமே பரபரப்பானது. இதனால் அவையில் இருந்த கட்சி தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ, அவையில் இருந்து கடும் கோபத்துடன் வெளியேறினார். கோபத்துடன் வெளியேறிய துரை வைகோவை சமாதானம் செய்ய கட்சி நிர்வாகிகள் முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வைகோ, “எக்காரணத்தைக் கொண்டும் பிஜேபியோடு சேர மாட்டோம் என்று சொன்ன எடப்பாடி பழனிசாமி இப்பொழுது இப்படி திடீரென முடிவெடுத்து அறிவித்திருக்கும் இந்த கூட்டணி நிலைக்குமா நீடிக்குமா? அல்லது நான்கு மாதத்திற்குள் அவர்களுக்குள்ளேயே ஒரு கருத்து வேறுபாடு உருவாகி குலையுமா என எதுவுமே தெரியாது. ஆனால் அவர்கள் பாஜகவிற்கு எடுபிடிபோல இருந்து கொண்டுதான் நேற்று அந்த நிகழ்ச்சியை நடத்தி காட்டினார்களே தவிர அதிமுகவிலிருந்து ஒரு வார்த்தை கூட யாரும் பேசவே இல்லை” என்று இபிஎஸை கடுமையாக விமர்சித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.