
தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று (12-04-25) சென்னை வானகரம் சென்னை வானகரம் பகுதியில் பா.ஜ.க சார்பில் மாநிலத் தலைவர் அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பங்கேற்ற நயினார் நாகேந்திரனுக்கு மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டதற்கான வெற்றிச் சான்றிதழை தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி வழங்கினார். அதன் பின்னர், கோப்புகளில் கையெழுத்திட்டு பா.ஜ.க மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றார்.
இந்த கூட்டத்தில் தமிழிசை செளந்தராஜன் பேசியதாவது, “தமிழக அரசியலில் ஒரு நிகழ்வின் போது, நெல்லை நமக்கு எப்போதும் தொல்லை தான் என்று கலைஞர் சொன்னார். ஆகவே, நெல்லையில் இருந்து திமுகவிற்கு ஒரு தொல்லை புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. தலைவர் முடிவு செய்யப்பட்டது எதற்காக என்றால், திமுக ஆட்சிக்கு முடிவு செய்வதற்காக இன்று தலைவரை முடிவு செய்திருக்கிறோம். குளத்தில் தாமரை, வட்ட இலையோடு இருந்தால் மலரும். ஆனால், தமிழகத்தில் இரட்டை இலையோடு இருந்தால் அதுவும் மலரும் என்பதை தான் அமித் ஷா நமக்கு சொல்லி இருக்கிறார்.
இன்றைய காலகட்டத்தில், நயினார் நாகேந்திரன் வெற்றிகரமாக எதையும் செய்து முடிக்கக் கூடியவர். திமுக கூட்டணிக்கு சிம்ம சொப்பனமாக இருக்க போகிறார். தாமரை மலர வேண்டும் என்று நமது சொப்பனத்தையும், அவர் நிறைவேற்றப் போகிறார். அதிமுக பா.ஜ.கவோடு இணைந்ததால் தமிழகத்திற்கு துரோகம் செய்து விட்டது என்று கனிமொழி சொல்கிறார். எந்த காங்கிரஸோடு நீங்கள் இணைந்திருக்கிறீர்கள்?. எமெர்ஜென்ஸி என்று குரல் வளையை நெரித்த காங்கிரஸோடு நீங்கள் இணைந்திருக்கிறீர்கள். இப்போது, நீங்கள் தமிழகத்திற்கு நியாயம் செய்து விட்டீர்களா?. இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸோடு நீங்கள் சேர்ந்து இருக்கிறீர்களே, இந்த தமிழகத்திற்கு நியாயம் இழைத்துவிட்டீர்களா?. மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதற்கு தான் நாங்கள் இன்று ஒன்றிணைந்து இருக்கிறோம். சூரியன் உதிர்க்கிறதோ இல்லையோ? கைகள் ஓங்குகிறதோ இல்லையோ? தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்” எனப் பேசினார்.