
தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று (12-04-25) சென்னை வானகரம் சென்னை வானகரம் பகுதியில் பா.ஜ.க சார்பில் மாநிலத் தலைவர் அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பங்கேற்ற நயினார் நாகேந்திரனுக்கு மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டதற்கான வெற்றிச் சான்றிதழை தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி வழங்கினார். அதன் பின்னர், கோப்புகளில் கையெழுத்திட்டு பா.ஜ.க மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றார்.
இந்த கூட்டத்தில் பேசிய நயினார் நாகேந்திரன், “என்மீது நம்பிக்கை வைத்து தலைமை தொண்டனாக தேர்ந்தெடுத்தற்கு அனைவருக்கும் எனது நன்றிகள். மிகப் பெரிய கட்சி இவ்வளவு பெரிய பொறுப்பை எனக்கு வழங்கியிருக்கிறது. அதிமுகவில் நான் மிகப்பெரிய பொறுப்பில் இருந்த எனக்கு, பா.ஜ.கவில் பொறுப்பு தரவில்லையே, தரவில்லையே என்ற கோபம் இருந்தது. ஆனாலும், நான் வேகமாகத்தான் இருப்பேன். இன்று நடக்கக்கூடிய ஆட்சி என்பது மக்கள் விரோத ஆட்சியாகவும், மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஆட்சியாகவும், ஊழல் மிகுந்த ஆட்சியாகவும், பெண்களை மதிக்காத ஆட்சியாகவும், பாலியல் வன்கொடுமையை நடத்துகின்ற ஆட்சியாகவும், மதுபோதைகளுக்கு மக்களை அடிமை ஆக்குகின்ற ஆட்சியாகவும் இந்த ஆட்சி இருக்கிறது.
இந்த ஆட்சியை வெகு விரைவில் நாம் விரட்டியடிக்க வேண்டும். அனைவரும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும். ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதை அமித்ஷா வருகையின் போது அடிகோள் நாட்டியிருக்கிறார். நாள் நிச்சயக்கப்பட்டிருக்கிறது” எனப் பேசினார்.