பா.ஜ.க மாநில துணைத் தலைவர் பி.டி. அரசகுமார் சமீபத்தில் ஒரு திருமண விழாவில் பேசியது பெரும் சர்ச்சையை அதிமுகவிலும், பாஜகவிலும் உருவாக்கியது. இது பற்றி விசாரித்த போது, தி.மு.க. மா.செ. புதுக்கோட்டை பெரியண்ணன் அரசு மகள் திருமண விழா மு.க.ஸ்டாலின் தலைமையில் ஞாயிறன்று நடைபெற்றது. இதில் மணமக்களை வாழ்த்த வந்த பா.ஜ.க அரசகுமார், தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலின் தான் என்று கூறினார். மேலும் கூவத்தூர் காலக்கட்டத்தில் அவர் நினைத்திருந்தால் முதல்வராகி இருக்கலாம். ஆனால் குறுக்கு வழியில் முதல்வராகக் கூடாது என்று ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து அரசியல் செய்கிறார். எனவே தமிழகத்தின் அடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் என்று பேசினார். இது அ.தி.மு.க. தரப்பில் பலத்த சலசலப்பை ஏற்படுத்திக்கிட்டு இருக்கிறது.
ஏற்கனவே குருமூர்த்தி ஒரு பக்கம் நம்மைத் தாக்கி பேசுகிறார். பா.ஜ.க. அரசகுமார் இன்னொரு பக்கம் ஸ்டாலின் தான் முதல்வர் என்று சொல்கிறார். ஆக பா.ஜ.க. நம்மை விட்டு விலகப் பார்க்கிறது என்று எடப்பாடியே அ.தி.மு.க. சீனியர்களிடம் கேட்டு வருவதாக கூறுகின்றனர். இதனால் சுதாரித்துக் கொண்ட அரசகுமார், நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை என்று மறுப்பு கூற, அதேநேரம் தமிழக பா.ஜ.க. பிரமுகர்கள், அரசகுமார் பேச்சு குறித்து டெல்லித் தலைமைக்குத் தகவல் கொடுத்துள்ளார்கள். ஆனால் இந்த விசயத்தில் பா.ஜ.க. தலைமை அமைதியாவே இருக்குது என்கின்றனர். லோக்கல் பாஜ.க.வினரோ, அரச குமார், அமைச்சர் விஜயபாஸ்கரின் விராலிமலைத் தொகுதியைச் சேர்ந்தவர். இருந்தும் எந்த ஒரு விழாவுக்கும் அவரை அமைச்சர் அழைப்பதில்லை. அந்த ஆதங்கத்தைத் தான் தி.மு.க. மா.செ. வீட்டு திருமண விழாவில் கொட்டித் தீர்த்துவிட்டார் என்கிறார்கள். இருப்பினும் அ.தி.மு.க. மீது பா.ஜ.க.வின் எரிச்சல் பார்வை இப்போது தீவிரமாகி உள்ளது என்கின்றனர்.