
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அடுத்துள்ளது வேலடிமடை கிராமம். மகேஷ் என்ற திருவாரூரைச் சேர்ந்த நபரும் அவருடைய நண்பரான ராமநாதபுரத்தைச் சேர்ந்த நவீன் என்பவரும் அக்கிராமத்தில் கதிர் அறுக்கும் இயந்திரத்தில் வேலை பார்த்து வந்தனர்.
நேற்று வழக்கம் போல் வேலை முடிந்து இரவு பேருந்து நிறுத்த நிழற்கூடத்தில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் அங்கு வந்த மூன்று பேர் மகேஷை கொடூரமாக தாக்கியுள்ளனர். அதில் முகம் சிதைந்த நிலையில் மகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதேபோல் அவருடைய நண்பர் நவீனும் தாக்கப்பட்டார். இதில் ரத்த காயங்களுடன் அருகில் உள்ள கிராம மக்களிடம் தஞ்சமடைந்த நவீன் கொடுத்த தகவல் அடிப்படையில் ஊர் மக்கள் அங்கு சென்று பார்த்த பொழுது மகேஷ் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைத்தனர்.
உடனடியாக போலீசருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த போலீசார் மகேஷ் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதேபோல் பலத்த காயங்களுடன் நவீன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.