Skip to main content

அரசு நிகழ்ச்சியில் அமைச்சரின் மகன்.. ‘ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கியுள்ளது..’ அதிமுக எம்.எல்.ஏ. காட்டம்

Published on 09/07/2021 | Edited on 09/07/2021

 

Minister Gandhi's son participated in government function


தமிழ்நாட்டின் கைத்தறி மற்றும் கதர்நூல்துறை அமைச்சராக இருப்பவர் காந்தி. இவரின் மகன் அரசு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சர்ச்சையில் சிக்கிக்கொண்டுள்ளார்.

 

தமிழ்நாடு முழுவதும் வருவாய்த்துறையின் சார்பில் ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்கி நடந்துவருகின்றன. இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் வாலாஜா வட்டத்தில் நடந்து முடிந்த ஜமாபந்தி நிகழ்ச்சியின் இறுதிநாளான ஜூன் 7ஆம் தேதி கதர் துறை அமைச்சரும், இராணிப்பேட்டை திமுக மா.செவுமான காந்தியின் மகன் சந்தோஷ்காந்தியை வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளனர் அதிகாரிகள்.


இது அரசியல் கட்சியினரை, பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அரசுபொறுப்புகளில் எதிலும் இல்லாதவர், அரசின் நிகழ்ச்சியில் அழைப்பாளராக, முக்கிய விருந்தினராக கலந்துக்கொண்டு எப்படி நலத்திட்ட உதவிகள் வழங்கலாம் என கேள்வி எழுந்துள்ளது.


இதுக்குறித்து இராணிப்பேட்டை மாவட்ட அதிமுக மா.செவும், எம்.எல்.ஏவுமான அரக்கோணம் ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசு நிகழ்ச்சியில் அமைச்சரின் மகன் கலந்துக்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கியது ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கியுள்ளது. மன்னராட்சி நடத்திக்கொண்டு மக்களாட்சி ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துவிட்டு, கூட்டாச்சி தத்துவத்தை பற்றி பேச திமுகவுக்கு தகுதியில்லை.


அதிமுக ஆட்சியில் சட்டம் பேசிய அதிகாரிகள் அடங்கிகிடக்கிறார்களா அல்லது அடக்கப்பட்டுள்ளார்களா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். இராணிப்பேட்டை மாவட்டத்தில் மன்னராட்சி நடத்தும் அமைச்சரை வன்மையாக கண்டிக்கிறோம். இதுக்குறித்து எங்கள் தலைமையுடன் ஆலோசித்து போராட்டம் நடத்தவுள்ளோம்’ என அறிக்கை வெளியிட்டுள்ளார்.


இந்த நிகழ்வு திமுக பிரமுகர்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்