கொடநாடு வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க நிர்வாகிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மற்றும் அ.ம.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அந்தக் கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர் செல்வம், “கொடநாடு கொள்ளை கூட்டத்திற்கும், சம்மந்தப்பட்ட கொலையாளிகளுக்கும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உரிய தண்டனையை பெற்றுத் தர வேண்டும். 24-04-2017 அன்று கொடநாடு பங்களாவில் காவலாளியாக இருந்த ஓம் பகதூர் என்பவரைக் கொலை செய்து அதன் தொடர்ச்சியாக கிருஷ்ண பகதூர் என்ற காவலாளியையும் கொலை செய்துள்ளார்கள். அதன் தொடர்ச்சியாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் என்பவரையும் கொலை செய்துள்ளார்கள். அதன் பின்னர், இந்த வழக்கில் குற்றவாளி என்று சொல்லப்பட்டிருந்த சயான், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் காரில் சென்று கொண்டிருந்த போது லாரியை மோதவிட்டு அந்த இடத்தில் விபத்தை உருவாக்கினார்கள். அந்த விபத்தில், சயானின் மனைவி மற்றும் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டார்கள். அதன் பின்னர் கொடநாடு கம்பூயுட்டர் ஆப்ரேட்டராக இருந்தவரையும் கொலை செய்தார்கள். ஆகவே, இவ்வளவு நடந்ததுக்கு பின்பும், சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுத்தர வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில்தான் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருக்கின்றது.
நான் ஆட்சிக்கு வந்தால் மூன்றே மாதத்தில் கொடநாடு பங்களாவில் நிகழ்த்தப்பட்ட கொள்ளையையும், கொலையையும் கண்டுபிடித்து அவர்களுக்கு உரிய தண்டனையை வழங்குவேன் என்று கடந்த சட்டமன்ற தேர்தலில், தமிழக முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தார். அந்த உறுதிமொழியை சொல்லி தான் அவர் ஆட்சிக்கு வந்தார். ஆனால், இன்றைக்கு 30 மாதங்கள் ஆகிவிட்டன. முப்பது மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும், இந்த வழக்கு இன்னும் ஆமை வேகத்தில்தான் நடந்து கொண்டிருக்கிறது. முப்பது மாதங்கள் ஆன பின் இந்த வழக்கை அதல பாதாளத்தில் தள்ளிவிட்டு ஒன்றுமே நடக்காதது போல் ஒரு போர்வையை இன்றைக்கு போர்த்தி கொண்டிருக்கிறார்கள்.
கொடநாடு பங்களாவில் ஈடுபட்ட கொள்ளைக் கூட்டத்தை யார் என்பதை மக்களுக்கு அடையாளம் காட்டத்தான் இந்த போராட்டம். கொலை செய்தவர்கள் யார் என்பதை மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும். அதன் பின்னனியில் இருந்து செயல்பட்டவர்களையும் நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும். இந்த நிலை நீடித்தால் தமிழகம் முழுவதும் போராட்டமாக வெடிக்கும் என்பதை தமிழக மக்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். சம்பவம் நடந்த அன்று இரவு, மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. அந்த மின்சாரத்தை யார் துண்டித்தார்கள். அந்த மின்சாரத்தை துண்டிக்கச் சொல்லி உத்தரவு பிறப்பித்தவர் யார் என்பதையெல்லாம் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தி அந்த குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம், எங்களுடைய உணர்வுகளையும் ஜெயலலிதா மீது நாங்கள் வைத்திருந்த பாசத்தையும் வெளிப்படுத்தி தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க தொண்டர்களும், அ.ம.மு.க தொண்டர்களும் இணைந்து இந்தப் பிரச்சனையை மக்கள் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம். மக்கள் கவனத்திற்கு கொண்டு வந்த பிரச்சனைக்கு தீர்வு வர வேண்டும்” என்று அவர் பேசினார்.