Skip to main content

நக்கீரன் ஆசிரியர் கைதை கண்டித்து போராட்டம் - வைகோ மீதான வழக்கை ரத்து செய்த ஐகோர்ட்

Published on 07/07/2021 | Edited on 07/07/2021
ddd


ஆளுநர் மாளிகை குறித்து செய்தி வெளியிட்டதற்காக நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அனுமதியின்று போராட்டம் நடத்தியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீதான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

 

மாணவிகளைப் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியதாக பேராசிரியை நிர்மலாதேவி குறித்து நக்கீரன் இதழில் வெளியான செய்தியில் ஆளுநரையும் இணைத்து, அவதூறு செய்திகளைப் பரப்புவதாகவும், ஆளுநர் பணியில் தலையிடுவதாகவும், ஆளுநரைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் அவரது செயலாளர் காவல்துறையில் புகார் அளித்தார்.

 

இந்தப் புகாரில் நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் உள்ளிட்டோர் மீது சென்னை ஜாம் பஜார் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டு, 2018ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார். இதைக் கண்டித்து பத்திரிகை, ஊடகத்தினரும், பல்வேறு அரசியல் கட்சியினரும் போராட்டக் களத்தில் குதித்த நிலையில், எழும்பூர் மாஜிஸ்திரேட் ரிமான்ட் செய்ய மறுத்ததால் மாலையில் விடுவிக்கப்பட்டார்.

 

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டபோது, அவரை சந்திக்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோரை காவல்துறையினர் தடுத்தனர். இதனால் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ உள்ளிட்ட 5 பேர் மீது, அனுமதியின்றி போராட்டம் நடத்தியது, போக்குவரத்தை முடக்கியது ஆகிய பிரிவுகளில் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

 

ddd

                                              தாமோதரன்

இதுதொடர்பான வழக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எம்.எல்.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வைகோ மனு தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார் இன்று (07.07.2021) பிறப்பித்த தீர்ப்பில் வைகோ உள்ளிட்ட 5 பேர் மீதான வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக தாமோதரன் ஆஜரானார்.

 

 

சார்ந்த செய்திகள்