மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக நேற்று வெளியிட்டது.
பாஜக வின் இந்த தேர்தலை அறிக்கையை காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, "காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பலகட்ட ஆலோசனைக்கு பிறகு உருவாக்கப்பட்டது. கோடிக்கணக்கான இந்திய மக்களின் குரலாகவும், எண்ணங்கள், சக்தியின் வெளிப்பாடாகவும் இருக்கிறது. ஆனால், பாஜகவின் தேர்தல் அறிக்கை, மூடப்பட்ட ஒரு அறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்படுத்த மனிதனின் குரலாக, குறுகிய நோக்கம் கொண்டதாக, ஆணவம் மிக்கதாக இருக்கிறது " எனத் தெரிவித்துள்ளார்.