காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொல்லப்பட்டதாக கூறப்படும் சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தைப் பகிர்ந்த காரணத்திற்காக தற்காலிகமாக முடக்கப்பட்டது. பெற்றோரின் படத்தைப் பகிர்ந்ததன் மூலம் பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தை வெளியிட்டுவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் ட்விட்டர் இந்த நடவடிக்கையை எடுத்தது.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரைச் சந்தித்தது தொடர்பான வீடியோவை ராகுல் காந்தி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவைப் பகிர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தை வெளியிட்டதற்காக, ராகுல் காந்தியின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ஃபேஸ்புக் நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டது. இருப்பினும், இதுவரை இந்த விவகாரத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இதனையடுத்து, ஃபேஸ்புக் இந்தியாவின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்புத் தலைவர் (trust and safety head) சத்யா யாதவை தங்கள் முன் ஆஜராகுமாறு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் வீடியோவை வெளியிட்டதற்காக ராகுல் காந்தியின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களுடன், வரும் செவ்வாய்க்கிழமை (17.08.2021) மாலை ஐந்து மணிக்கு நேரிலோ அல்லது காணொளி மூலமாகவோ ஆஜராகுமாறு அந்த சம்மனில் கூறப்பட்டுள்ளது.