சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளைக் கடந்தபின்னும், கத்துவா பாலியல் வன்புணர்வு போன்ற சம்பவங்கள் நடப்பது அவமானகரமானது என குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 8 வயது சிறுமி கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். ஒரு வாரத்திற்குப் பின்னர் அந்த சிறுமி சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இந்த கொலை தொடர்பாக சமீபத்தில் வெளியான காவல்துறையின் குற்றப்பத்திரிகை பொதுசமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல், உத்தரப்பிரதேசம் மாநில பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் என்பவரால் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, சூரத்தில் 11 வயது சிறுமி, உத்தரப்பிரதேசம் மாநிலம் இடாக் நகரில் 7 வயது சிறுமி என தொடர்ந்து சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வந்தவண்ணம் உள்ளன.
இந்த சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்த நிலையில், தொடர்ந்து மவுனம் காத்துவந்த நிலையில் பிரதமர் மோடி கடந்த 13ஆம் தேதி சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு தனது கண்டனங்களைத் தெரிவித்தார். ‘நம் மகள்களுக்கு நீதி நிச்சயம் கிடைக்கும். இதுபோன்ற சம்பவங்கள் நம் உணர்வுகளை ஆட்டம்காணச் செய்கின்றன’ என அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், ‘சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளைக் கடந்தபின்னரும், நம் நாட்டில் கத்துவா கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நடப்பது அவமானகரமானது. நாம் எந்தமாதிரியான சமூகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பது பற்றி கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இனி இதுபோல் எந்த சிறுமியும், பெண்ணும் துன்புறாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்’ என தெரிவித்துள்ளார்.