
சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் இன்று (14.04.2025) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் அவரது பிறந்தநாளை தமிழக அரசு சமத்துவ நாளாக அறிவித்து ஆண்டு தோறும் சாதி ஒழிப்பு உறுதிமொழி எடுத்து வருகிறது.
இந்நிலையில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி ஆளுநர் மாளிகையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேசுகையில், “இன்று வரை, தேர்தல்களின் போது மட்டுமே, தலைவர்கள் வாக்கு வங்கி அரசியலுக்காக அவரது பெயரைப் பயன்படுத்துகின்றனர். அது போன்றே பாபாசாகேப் நினைவு கூரப்படுகிறார். தேர்தல் முடிந்ததும், அவர்கள் அவரை மறந்துவிடுகிறார்கள். இது நன்றியின்மையைத் தவிர வேறில்லை. நாடு முழுவதும் தலித் மக்கள் தொடர்ந்து துன்பப்படுவது இன்னும் வேதனை அளிக்கிறது. பாகுபாடு இன்னும் உள்ளது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் சமூக நீதியை நிலைநாட்டுவதாகக் கூறும் தமிழ்நாட்டில் நாம் கேட்கும் செய்திகள் மனதை நொறுக்க செய்கின்றன.
செருப்பு அணிந்து கிராமத் தெருவில் நடந்து சென்றதற்காக ஒரு தலித் தாக்கப்பட்டார். மோட்டார் சைக்கிளில் சென்றதற்காக ஒரு இளம் தலித் தாக்கப்பட்டார். ஆசிரியரால் பாராட்டப்பட்ட மாணவன் ஒருவர் வீட்டில் தாக்கப்படுகிறார். தண்ணீர் தொட்டிகளில் மனிதக் கழிவுகள் காணப்படுகின்றன. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மரணங்களால் 66 பேர் இறந்தனர். நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் தலித்துகள். தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. 2020க்குப் பிறகு, 50% அதிகரித்துள்ளது.
தலித் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. தமிழ்நாட்டில் இதுபோன்ற குற்றங்களுக்கான தண்டனை விகிதம் தேசிய சராசரியை விட பாதிக்கும் குறைவு என அரசியல் அறிக்கைகள் சொல்கினறன்.நீதிக்காக தலித்துகள் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்?. அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எவ்வளவு காலம் நிறைவேற்றப்படாமல் இருக்கும்?. இது ஆன்மாவை ஆராய்வதற்கான நேரம். அரசியலமைப்பையும், இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவிய தொலைநோக்குப் பார்வையையும் நமக்கு வழங்கிய மனிதருக்கு நாம் நேர்மையாகவும் நன்றியுடனும் இருக்க வேண்டும்” எனப் பேசினார்.