
ஆந்திரப் பிரதேசம் மாநிலம் அனகப்பள்ளி மாவட்டம் கோட்டவுரட்லா குருவட்டத்திற்கு உட்பட்டது கைலாசப்பட்டினம். இங்கு பட்டாசு உற்பத்தி ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்தப் பட்டாசு ஆலையில் இன்று (13.04.2025) வழக்கம்போல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதே சமயம் இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீசாரின் முழு விசாரணைக்குப் பின்னரே தெரிய வரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வெடிவிபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படை வீரர்கள் தீயை அணைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த வெடி விபத்தில் சிக்கியர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர். இந்த வெடிவிபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்ற முதற்கட்டத் தகவல் வெளியாகியிருந்தது. இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தேவையான உதவியை அரசு அளிக்கும் என்று அம்மாநில முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு உறுதியளித்துள்ளார்.
மேலும் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் தைரியமாக மன உறுதியுடன் இருக்க முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். இந்த வெடி விபத்தில் காயமடைந்த தொழிலாளர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளனர் என ஆந்திரப் பிரதேச முதல்வர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
இத்தகைய சூழலில் தான் வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்தனர் எனவும், 7 பேர் படுகாயமடைந்தனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார். அதோடு நிதியுதவியையும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் சார்பில் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆந்திரப் பிரதேசத்தின் அனகப்பள்ளி மாவட்டத்தில் ஏற்பட்ட தொழிற்சாலை விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில நிர்வாகம் உதவி செய்து வருகிறது. உயிரிழந்த ஒவ்வொருவரின் நெருங்கிய உறவினர்களுக்கும் பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.