மக்களவை தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியை தொடர்ந்து ராகுல் காந்தி தன்னுடைய காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும், ராகுலே தலைவராக தொடர வேண்டுமென அக்கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் உட்பட பலரும் கூறினர். ஆனால் ராகுல் தனது முடிவில் தீவிரமாக இருப்பதையடுத்து, மாற்று தலைவராக யாரை நியமிக்கலாம் என்ற ஆலோசனைகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான நட்வர் சிங், "சோன்பத்ரா விவகாரத்தில் பிரியங்கா காந்தி செய்ததை பார்த்திருப்பீர்கள். அது மிகவும் அற்புதமானது. அவர் கிராமத்திலேயே தங்கி அவர் நினைத்ததை சாதித்துவிட்டார். நேரு குடும்பத்தில் இருந்து யாரும் தலைவராக வரமாட்டார்கள் என ராகுல் தெரிவித்துவிட்டார். ஆனால், தலைவர் பதவிக்கு தகுதியானவர் பிரியங்கா காந்திதான் என்று இந்த சம்பவம் எடுத்துக்காட்டியுள்ளது. காந்தி குடும்பத்தாரை தவிர வேறு யாராவது தலைவராக வந்தால் 24 மணி நேரத்தில் கட்சி பிளவுபடும்" என தெரிவித்துள்ளார்.