யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்றதில் இருந்தே உத்தரப்பிரதேசத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. கொலைகளும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அந்த வகையில் ஓரிரு நாட்களுக்கு முன் உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் எம்.பி. அடிக் அகமதுவும் அவருடைய சகோதரர் அஷ்ரஃபும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கடந்த 2005 ஆம் ஆண்டு முன்னாள் பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏவாக இருந்த ராஜுபால் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த அட்டிக் அகமது மற்றும் அஷ்ரஃப் மருத்துவ பரிசோதனைக்காக காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட போது இருவரும் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது செய்தியாளர்கள் போல் நின்றிருந்த இருவர் அட்டிக் மற்றும் அஷ்ரஃப் இருவரையும் துப்பாக்கியால் சுட்டனர். இத்தாக்குதலில் இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த இரு கொலைகளின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு இளம்பெண் ஒருவர் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் எய்ட் நகரத்தில் வசித்து வந்த ரோஷினி அஹிர்வர் அங்கே இருக்கும் ராம் லகான் படேல் மகாவித்யாலயா என்ற கல்லூரியில் பி.ஏ முதலாமாண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கல்லூரிக்கு தேர்வு எழுதச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த அவரை இருசக்கர வாகனத்தில் இருந்து வந்த இரண்டு இளைஞர்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து பட்டப்பகலில் சரமாரியாகச் சுட்டுள்ளனர். அதில் சம்பவ இடத்திலேயே ரோஷினி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ரோஷினியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ராஜ் அஹிர்வர் என்ற இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், அந்த இளைஞர் ரோஷினியை காதலித்து வந்துள்ளதாகவும், ஆனால் ரோஷினி அவரின் காதலை ஏற்கவில்லை என்றதால் அந்த இளைஞர் அவரை சுட்டுக் கொன்றுள்ளதும் தெரியவந்துள்ளதாக போலீஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ராஜ் அஹிர்வரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.