
அதிமுக உட்கட்சி பூசல்களால் உடைந்து சிதறிக்கிடப்பதைப் பார்த்து உண்மையான கட்சி தொண்டர்கள் வெந்து நொந்துபோய் உள்ளனர். மற்றொரு பக்கம் கட்சித் தலைமையை யார் ஏற்பது என்ற பதவி மோதல்கள் உச்சம் தொட்டது மேலும் வேதனைகளை ஏற்படுத்தியுள்ளது. தலைமையை விரும்பி மோதல்களில் ஈடுபட்டவர்கள் தங்களுக்குள் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ள முடியாமல் பாஜக பக்கமாகப் பஞ்சாயத்தைக் கொண்டு சென்றனர். இதனால் ஒவ்வொருத்தராக டெல்லிக்கு அழைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக நிர்வாகிகளுடன் தனித்தனியாகப் பேசியவர் தமிழ்நாடு வந்து அதிமுக - பாஜக கூட்டணியை அறிவித்துச் சென்றார்.
இந்த கூட்டணியைக் கட்சியில் பதவிகளுக்கான ஆசையில் இருக்கும் நிர்வாகிகள் ஏற்றுக் கொண்டாலும் கட்சி தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகர அதிமுக சிறுபாண்மைப் பிரிவு செயலாளரும், 11வது வார்டு செயலாளருமான முகமது கனி, புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கருக்கு ராஜினாமா கடித அனுப்பியுள்ளார். அதில், “நான் கடந்த 45 ஆண்டுகளாகக் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி உள்ளேன். தற்போது சிறுபான்மை மக்களுக்கு எதிராக உள்ள பாசிச பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன்” என அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
இதனால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், தற்போது முகமது கனியைப் போல ஏராளமான அதிமுக நிர்வாகிகள் பாஜகவுடனான கூட்டணியை ஏற்கமுடியாமல் தவித்து வரும் நிலையில் முகமது கனி போல நடவடிக்கைகளில் இறங்கவும் தயாராகி வருகின்றனர் அதிமுகவினர்.