அமெரிக்க நாட்டின் துணை அதிபராக பதவியேற்றார் கமலா ஹாரிஸ்.
வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அமெரிக்காவின் 49 ஆவது துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றுக் கொண்டார். கமலா ஹாரிஸுக்கு அந்நாட்டு உச்சநீதிமன்ற நீதிபதி சோனியா சோடோமேயர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அமெரிக்க துணை அதிபராக பதவியேற்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார் கமலா ஹாரிஸ். இவர் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
இந்த பதவியேற்பு விழாவில் முன்னாள் அதிபர்களான பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ், ஒபாமா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அமெரிக்க அதிபர், துணை அதிபர் பதவியேற்பு விழாவையொட்டி, வாஷிங்டனில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த 25,000 வீரர்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதனிடையே, அமெரிக்க துணை அதிபராக பதவியேற்ற கமலா ஹாரிஸின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தில் மக்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.