
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் சுற்றுப்பயணமாக கடந்த 3ஆம் தேதி தாய்லாந்து சென்றார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக அந்நாட்டு பிரதமரைச் சந்தித்துப் பேசினார். அந்த பேச்சுவார்த்தையில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகக் கூறப்பட்டது. இதனையடுத்து, அங்கு நடைபெற்ற பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் 6வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த மாநாட்டை நிறைவு செய்த பிரதமர் மோடி, தாய்லாந்தில் இருந்து நேற்று (04.04.2025) இரவு இலங்கைக்கு புறப்பட்டார். கொழும்பு விமான நிலையத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அரசு உற்சாக வரவேற்பு அளித்தது. இதையடுத்து, கொழும்பு பகுதியில் பாரம்பரிய முறைப்படி அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று (05.04.2025)காலை இலங்கை அதிபர் அநுர குமார திஸநாயக்க உடன் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின் போது இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு, எரிசக்தி, டிஜிட்டல் உள்கட்டமைப்பு சுகாதாரம் மற்றும் வர்த்தகத் துறை உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக கூறப்படுகிறது. அதே சமயம் இலங்கை ராணுவத்தால் கைதாகும் தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து இலங்கை அரசிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், நீண்டகால பிரச்சனையாக கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மத்திய அரசு மீட்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களைத் தமிழக அரசு சமீபத்தில் நிறைவேற்றியுள்ள நேரத்தில், பிரதமர் மோடி இலங்கைக்கு சென்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அதிபர் அநுரகுமார திசாநாயக்கவுடன் கொழும்பில் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அதோடு ‘இலங்கை மித்ர விபூஷண்’ என்ற உயரிய விருது மோடிக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி உரையாற்றுகையில், “தமிழ் மகான் திருவள்ளுவரின் வார்த்தைகள் எனக்கு நினைவுக்கு வருகின்றன. அதாவது அவர் ‘செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு’ எனக் கூறியுள்ளார். அதாவது அதன் பொருள், சவால்கள் மற்றும் எதிரிகளை எதிர்கொள்ளும் போது, ஒரு உண்மையான நண்பனையும் அவனது நட்பின் கேடயத்தையும் விட வலுவான உறுதிப்பாடு எதுவும் இல்லை என்பதாகும். மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்.
இந்த விஷயத்தில் மனிதாபிமான அணுகுமுறையுடன் தொடர வேண்டும் என்று நாங்கள் ஒப்புக்கொண்டோம். மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிப்பதிலும் நாங்கள் வலியுறுத்தினோம். இலங்கையில் மறுகட்டமைப்பு மற்றும் நல்லிணக்கம் குறித்தும் நாங்கள் பேசினோம். அதிபர் திசாநாயக்கா அவரது நல்ல அணுகுமுறையை வெளிப்படுத்தினார். இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் என்றும், இலங்கை அரசியலமைப்பை முழுமையாக செயல்படுத்துவதற்கும், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கும் அதன் உறுதிப்பாட்டை நிறைவேற்றும் என்றும் நாங்கள் நம்புகிறோம்” எனப் பேசினார்.