
'கோடைகாலம்' என்றாலே நீர் நிலைக்கு இரையாகும் உயிரிழப்புகள் எண்ணிக்கை என்பது அதிகரிப்பது வாடிக்கையாகி வருகிறது. அதற்கு முந்தைய காலங்களில் நிகழ்ந்த சம்பவங்களே சாட்சி.
கோடை காலங்களில் நீர் நிலைகளில் குளிக்க செல்பவர்கள் குறிப்பாக பள்ளி சிறுவர்கள், கல்லூரி மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். இந்நிலையில் கோடை காலம் தொடங்கி இருக்கும் இந்த சூழ்நிலையிலேயே நேற்று ஒரே நாளிலேயே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நீர்நிலைகளில் மூழ்கி 10 பேர் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வடக்கு கொளக்குடி ஜாகிர் உசேன் நகர் பகுதியைச் சேர்ந்த உபயத்துல்லா (வயது 8), முகமது அபில் (வயது 10), ஷேக் அப்துல் ரஹ்மான் (வயது 13) உள்ளிட்ட 5 சிறுவர்கள் நேற்று (14.04.2025) காலை வெள்ளியங்கால் ஓடையில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது ஓடையில் உள்ள பள்ளத்தில் உபயத்துல்லா, முகமது அபில்,ஷேக் அப்துல் ரஹ்மான் ஆகிய 3 பேர் தவறி விழுந்து மூழ்கியுள்ளனர்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறை வீரர்கள் சுமார் 3 மணி நேரத் தேடலுக்கு பின்னர் 3 சிறுவர்களின் உடல்களை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.

அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் பகுதியில் ஏரியில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பல மணி நேர தேடுதலுக்கு பின்னர் இரண்டு சிறுமிகள் சடலமாக மீட்கப்பட்டனர். அதேபோல் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்ற பயணிகள் குடும்பத்துடன் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பொழுது இரண்டு சிறுமிகள் நீச்சல் தெரியாமல் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி இறந்தனர்.
கரூர் மாவட்டம் அமராவதி ஆற்றில் மதுபோதையில் இளைஞர் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதேபோல் தென்காசி மாவட்டம் கற்குடி பகுதியில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாக்கெட்டில் தவறி விழுந்த ஆண் குழந்தை ஒன்று இறந்துள்ளது. திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
இப்படியாக நேற்று ஒரு நாளில் மட்டும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நீருக்கு 10 பேர் இரையாகி உள்ளனர். கோடை விடுமுறை நெருங்கி வருவதால் பள்ளி சிறுவர்கள் பொழுதுபோக்கிற்காக நீர்நிலைகளில் குளிக்க முயலும் போது ஏற்படும் சம்பவங்கள் விபரீதத்தில் முடியும் நிலையில் இதற்கான அறிவுறுத்தல்களையும் விழிப்புணர்வுகளையும் பள்ளி ஆசிரியர்களும், பெற்றோர்களும் சிறுவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.