போர் சூழலில் குடும்பத்தைப் பத்திரமாக, பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பிய உக்ரைன் நபர் ஒருவர், மகளைப் பிரிய மனமில்லாமல் அழுத வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அந்நாட்டு மக்கள் தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள உக்ரைனில் இருந்து வெளியேறி ருமேனியா, ஹங்கேரி, போலந்து, பெலாரஸ் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு தஞ்சமடைந்து வருகின்றனர். இந்த நிலையில், உக்ரைன் நபர் ஒருவர் தனது குடும்பத்தை தலைநகர் கீவில் இருந்து வேறொரு இடத்திற்கு அனுப்பி வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அப்போது தனது மகளை பிரிய மனமில்லாமல், அந்த தந்தை உடைந்து போய் கட்டியணைத்து அழும் வீடியோ பார்ப்போரைக் கண் கலங்க வைத்துள்ளது. மேலும், இந்த வீடியோவைப் பார்த்தும் ரஷ்ய அதிபரின் மனம் கரையவில்லையா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு, அதிபர் விளாடிமிர் புதினுக்கு பிரிட்டன், இந்தியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. அதேபோல், ரஷ்யா, அமெரிக்காவில் உக்ரைன் நாட்டு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும், ரஷ்ய அதிபருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போர் சூழல் தீவிரமடைந்துவரும் நிலையில், அந்நாட்டு அதிபர், 18 முதல் 60 வயதுக்குட்பட்ட உக்ரைன் நாட்டு ஆண்கள் அந்நாட்டில் இருந்து வெளியேற தடை விதித்துள்ளார்.