Skip to main content

அமெரிக்காவைத் திருப்பி அடித்த சீனா; வர்த்தக போருக்கு வழி வகுக்கும் அபாயம்?

Published on 10/04/2025 | Edited on 10/04/2025

 

China hits back at US with tariffs

சீனா, இந்தியா போன்ற வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு பரஸ்பர வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 2ஆம் தேதி அறிவித்தார். அந்த அறிவிப்பில், இந்தியப் பொருட்களுக்கு 27% இறக்குமதி பரஸ்பர விதியும், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 34% பரஸ்பர வரியையும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 20% வரியும், ஜப்பான் பொருட்களுக்கு 22% இறக்குமதியும் விதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே போல், பாகிஸ்தான் 29%, வியட்நாம் 46%, வங்கதேசம் 37% என இப்படியாக ஒவ்வொரு நாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.

அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு நடவடிக்கையால் உலக நாடுகள் அதிர்ந்து போயின. மேலும், பல்வேறு நாடுகளும் அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்தது. அமெரிக்காவிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 34% வரி விதிக்கப்படவுள்ளதாக சீனா அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. இந்த வரி விதிப்பு நடவடிக்கையால், உலக அளவில் பங்குச் சந்தைகள் தொடர்ந்து சரிவை சந்தித்து. இந்த சூழலில், அமெரிக்கப் பொருட்கள் மீது சீனா விதித்த 34% வரியை 24 மணி நேரத்திற்குள் திரும்ப பெறவில்லை என்றால் சீனப் பொருட்களுக்கு 104% கூடுதல் வரியை அமெரிக்கா விதிக்கும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அமெரிக்கா மீதான 34% வரிவிதிப்பை 24 மணி நேரக் கெடு முடிந்தும் சீனா பெறாமல் இருந்தது. 

இதனையடுத்து, அமெரிக்கா எச்சரிக்கை விட்டதன்படி சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 104% வரி விதிக்கப்படுவதாகவும், இந்த வரிவிதிப்பு நேற்று (09-04-25) அமலுக்கு வருவதாகவும் அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்தது. அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்கப் பொருட்களுக்கு 84% கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்படுவதாக சீனா நேற்று அறிவித்தது. உடனடியாக சீனாவுக்கு பதிலடியாக, சீனப் பொருட்களுக்கு 125% வரி விதிப்பதாக அமெரிக்கா நேற்று அறிவித்தது. சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 125% வரி விதித்த அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், மற்ற நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பரஸ்பர வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், அமெரிக்கப் பொருட்களுக்கு 84% இறக்குமதி வரி விதிப்பு நடவடிக்கை இன்று (10-04-25) அமலுக்கு வருவதாக சீனா அறிவித்துள்ளது. இது குறித்து சீனா தெரிவித்ததாவது, ‘வர்த்தகப் போரில் வெற்றியாளர் யாரும் இல்லை என்பதையும், சீனா வர்த்தகப் போரை விரும்பவில்லை என்பதையும் வலியுறுத்த விரும்புகிறோம். ஆனால், அதன் மக்களின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்கள் பாதிக்கப்படும் போதும், பறிக்கப்படும் போதும் சீன அரசாங்கம் ஒருபோதும் கண்டுகொள்ளாமல் இருக்காது. அமெரிக்காவின் எந்த வகையிலான போரையும் எதிர்கொள்ளத் தயார்’ எனத் தெரிவித்துள்ளது. சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான இந்த வரி விதிப்பு நடவடிக்கையால், உலக அளவில் வர்த்தக போருக்கு வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்