
அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி, அமெரிக்காவில் இரு பாலினம், சட்டவிரோத குடியேற்றத்தில் புதிய கட்டுப்பாடுகள், பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை ரத்து போன்ற அறிவிப்புகளால் உலக நாடுகளே அதிர்ந்து போயின.
இந்த சூழ்நிலையில், வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி விதியை கடந்த 2ஆம் தேதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதில், அனைத்து நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் ஆட்டோமொபைல் பொருட்களுக்கு 25 சதவிகித இறக்குமதி வரியும், இந்திய பொருட்களுக்கு 26 சதவீதம் இறக்குமதி வரியும் விதிக்கப்படுவதாக அறிவித்தார். மேலும், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 34% பரஸ்பர வரியும், ஐரோப்பிய ஒன்றியத்தின் இறக்குமதி பொருட்களுக்கு 20% வரி மற்றும் ஜப்பான் பொருட்களுக்கு 22 சதவிகித இறக்குமதி வரியும் விதிக்கப்படுவதாக அறிவித்தார். இப்படியாக ஒவ்வொரு நாட்டில் இருந்தும் அமெரிக்காவிற்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு பரஸ்பர வரி அறிவித்திருந்தார்.
அமெரிக்காவின் இந்த கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கையால், பல்வேறு நாடுகளும் அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்தன. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனாவும், அமெரிக்கா பொருட்களுக்கு 34% வரியை அதிகரிக்கவுள்ளதாக அறிவித்தது. இந்த அதிரடி நடவடிக்கைகளால், உலக அளவில் வர்த்தக போருக்கு வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், வரிவிதிப்புகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து உலக அளவில் பங்குச் சந்தைகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன. இதன் மூலம், உலகில் இருக்கும் தொழிலதிபர்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்கா வெள்ளை மாளிககையில், டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து பேசியுள்ளார். இது குறித்து பெஞ்சமின் நெதன்யாகு தெரிவிக்கையில், “காசாவில் பிணைக்கைதிகள் திரும்ப பெறுவது மற்றும் இஸ்ரேல் மீது விதிக்கப்பட்டுள்ள வரி விதிப்பு குறித்து விவாதித்தோம்” என்று செய்தியாளர்களிடம் கூறினார். காசா - இஸ்ரேல் இடையே கடந்த 1 வருடங்களுக்கு மேலாக போர் நடந்து வரும் சூழ்நிலையில், இஸ்ரேல் பிரதமர், அமெரிக்க அதிபரை டிரம்பை இரண்டாவது முறையாக சந்தித்துள்ளார். இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருவதால், அந்த நாட்டுக்கு மட்டும் வரி விலக்கு அளிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.