வடக்கு மெசடோனியாவில் 'டவுன் சிண்ட்ரோம்' காரணமாகப் பள்ளியில் கேலிக்கு ஆளான சிறுமியுடன் அந்நாட்டு அதிபர் பள்ளிக்குச் சென்ற சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
தென்கிழக்கு ஐரோப்பிய நாடான வடக்கு மாசிடோனியாவில் உள்ள ஒரு பள்ளியில் படித்துவருகிறார் 11 வயது சிறுமியான எம்ப்லா அடெமி. டவுன் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்ட இவர் பள்ளியில் சக மாணவர்களால் கேலிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அந்நாட்டின் அதிபர் ஸ்டீவோ பெண்டாரோவ்ஸ்கிக்கு தகவல் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அந்த சிறுமியின் வீட்டிற்குச் சென்ற அதிபர் ஸ்டீவோ பெண்டாரோவ்ஸ்கி, சிறுமி எம்ப்லா அடெமிக்கு சில புத்தகங்களைப் பரிசாகக் கொடுத்துள்ளார். பின்னர், பெற்றோரிடம் சிறுமியின் நிலை குறித்துக் கேட்டறிந்த அவர், அவர்களுடன் உரையாடிவிட்டு, சிறுமியை தானே பள்ளிக்கும் அழைத்துச் சென்றுள்ளார். சிறுமியின் கையை பிடித்தவாறு அவர் பள்ளிக்கு அழைத்துச்செல்லும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.
இதுகுறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிபர் ஸ்டீவோ பெண்டாரோவ்ஸ்கி, "எம்ப்லாவுக்கு நடந்த இந்த சம்பவம், நாம் எப்படிப்பட்ட தவறான எண்ணங்களுடன் வாழ்கிறோம் என்பதையும், குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு நாம் கூடுதல் கவனிப்பும் பாதுகாப்பும் கொடுக்க வேண்டியதன் அவசியம் என்ன என்பதையும் நினைவூட்டுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், "குழந்தைகளின் உரிமைகளுக்கு ஆபத்தை விளைவிப்பவர்களின் நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது. குறிப்பாக வளர்ச்சி குறைபாடுகளைக் கொண்ட குழந்தைகள் விஷயத்தில் இது ஏற்றுக்கொள்ளவே முடியாதது. மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கும் சக மனிதர்களைப் போல அனைத்து உரிமைகளும் உள்ளது, அதை உறுதி செய்வது நம் அனைவரின் கடமை. மாற்றுத்திறனாளி என்பதற்காக ஒருவரை ஒதுக்குவது தவறு, சமூகத்தில் உள்ள ஓவ்வொருவருக்கும் இந்த பொறுப்பு அவசியம்" என்று அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளியில் கேலிக்கு ஆளான சிறுமிக்குத் தன்னம்பிக்கை அளிக்கும் வகையிலும், சக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பள்ளிக்குச் சென்ற அந்நாட்டு அதிபருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.