ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வந்தநிலையில், இன்று காலை உக்ரைனை தாக்க ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டார். மேலும் அவர், உக்ரைன் இராணுவத்தினர் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும் எனவும், உக்ரைன் பிரச்சனையில் வெளிநாடுகள் தலையிட்டால், இதற்கு முன் சந்திக்காத அளவிற்கு பின்விளைவுகளை சந்திக்க நேரும் எச்சரிக்கை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து ரஷ்ய இராணுவம், உக்ரைன் மீது தாக்குதலை தொடங்கியுள்ளது. இதற்கு அமெரிக்கா, நேட்டோ கூட்டமைப்பு ஆகியவை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதற்கிடையே உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கை உக்ரைன் மக்களை பாதுகாக்கவே என புதின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர், “உக்ரைன் அரசால் 8 ஆண்டுகளாக இனப்படுகொலைக்கு ஆளாகி வரும் மக்களைப் பாதுகாப்பதே இராணுவ நடவடிக்கையின் நோக்கம். ரஷ்யா, உக்ரைனின் இராணுவமயத்தை குறைக்கும். பொதுமக்களுக்கு எதிராக ஏராளமான அட்டூழியங்களைச் செய்தவர்களை சட்டத்தின் கையில் ஒப்படைப்போம். உக்ரேனிய பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் எங்களிடம் இல்லை. வலுக்கட்டாயமாக யார் மீதும் எதையும் திணிக்கப் போவதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.