கோடை மழை கடந்த காலத்தைவிட அதிகமாக பெய்துள்ளது என்கிறது வானிலை ஆய்வு மையம். அதன்படி தமிழகம் முழுவதுமே பரவலாக மழை பெய்துள்ளது. வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களில் ஓரளவு மழை பெய்து வெப்பத்தை விரட்டியுள்ளது.
இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த மழை பல இடங்களில் விவசாயிகளை கண்ணீர் விட செய்துள்ளது. திருவண்ணாமலை அடுத்த செங்கம், புதுப்பாளையம், கலசப்பாக்கம், போளுர் போன்ற பகுதிகளில் நன்றாக மழை பெய்தது. இந்த மழையால் மேல்சோழங்குப்பம் கிராமத்தில் சுமார் 30 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியது. இந்த நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தவை. தண்ணீர் தேங்கியது மற்றும் நெல் கதிர்கள் மண்ணில் படுத்துவிட்டதால் நெற்பயிர்கள் அறுவடை செய்ய முடியவில்லை. இதனால் நெல் மணிகள் அறுவடை செய்யாமல் மீண்டும் நிலத்தில் முளைத்துவிட்டது. இதனால் குடும்பத்துடன் நிலத்தில் இறங்கி மார்தட்டி ஒப்பாரி வைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கூலி ஆட்களை வேலைக்கு வைத்து நடவு செய்து, நாற்று நட்டு தற்பொழுது அறுவடை செய்யும் தருவாயில் நெற்பயிர்கள் முழுவதும் முளைத்துள்ளதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை அடைந்துள்ளனர். நெற்பயிர் சேதம் குறித்து புகார் அளித்தும் கடந்த 10 நாட்களாகியும் வேளாண்மைத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் என யாரும் இதுவரை எட்டிக்கூட பார்க்கவில்லை என்று மன வேதனைப்படுகின்றனர் விவசாயிகள். இங்கு மட்டும்மல்ல மாவட்டம் முழுவதும்மே இதுதான் நிலை. களப்பணிக்கு செல்ல வேண்டிய வேளாண்மைத்துறை அதிகாரிகள் அலுவலகத்தை விட்டு நகராமல் பாதிப்பு எதுவும் இல்லை என ரிப்போட் செய்து விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறார்கள் எனப் புலம்புகிறார்கள் விவசாய சங்கத்தினர்.
ஏக்கருக்கு சுமார் 20,000 முதல் 30 ஆயிரம் வரை செலவு செய்திருப்பதாகவும் அதை வேளாண் அதிகாரிகள் முறையாக கணக்கிட்டு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.