![Tamil Nadu rulers have failed P. Shanmugam sensational allegation](http://image.nakkheeran.in/cdn/farfuture/zLSHOlL49-joAFWUsEzgHx9OSi98-uAfAyJlvi1Cq9g/1739354240/sites/default/files/inline-images/cpm-sanmugam-art-pm.jpg)
தமிழக ஆட்சியாளர்கள் தோல்வி அடைந்து விட்டார்கள் என மார்க்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் கடந்த 08.10.2015 அன்று பஞ்சமி நிலத்தை மீட்பதற்கு என்று உயர்நிலைக் குழுவைத் தமிழக அரசு அமைத்தது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி அமைக்கப்பட்ட இந்த குழு பல ஆண்டுகளுக்குப் பிறகு 2.5 லட்சம் ஏக்கர்களை அடையாளம் கண்டிருக்கிறோம் என்று செய்தி வெளியிட்டார்கள். ஆனால் மொத்தம் உள்ள 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தில் 2.5 லட்சம் ஏக்கர் தான் அடையாளம் கண்டிப்பதாக உயர் நீதிமன்றத்தில் உயர்நிலைக் குழு அறிக்கை வெளியிட்டது. ஆனாலும் அந்த 2.5 லட்சம் ஏக்கர் கூட இன்றைய தேதி வரை மீட்கப்படவில்லை.
ஆகவே பஞ்சமி நிலத்தை மீட்டு பட்டியல் சமூக மக்களிடம் ஒப்படைப்பதில் திமுக மற்றும் அதிமுக 2 அரசாங்கங்களும் அலட்சியமாகவும், மெத்தனப் போக்காக நடந்து கொண்டிருக்கிறது. என்பதற்கு இந்த சம்பவங்கள் உதாரணம். அதே நேரத்தில் அரசாங்கத்தின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் என்கிற பெயரில் பட்டியல் சமூக மக்களிடம் உள்ள பல்லாயிரக்கணக்கான நிலங்களை ஆட்சியாளர்களால் தொடர்ந்து பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. சென்னை பரந்தூர் விமான நிலையம் உட்படப் பல்லாயிரக்கணக்கான பட்டியல் சமூக மக்களின் நிலங்கள் வளர்ச்சித் திட்டம் என்கிற பெயரில் பறிக்கக்கூடிய நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டு இருக்கிறது.
நில உச்சவரம்பு சட்டம் ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழகத்தில் அமலில் உள்ளது. இந்த 60 ஆண்டுக் காலத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ் தமிழகத்தின் ஆட்சி செய்து உள்ளனர். அதன்படி மூன்று கட்சிகளும் தான் தமிழக ஆட்சி செய்துள்ளனர். ஆனால் இந்த 60 ஆண்டுக் காலத்தில் வெறும் 2 லட்சம் ஏக்கர் மட்டும்தான் நில உச்சவரம்பு சட்டத்தைப் பயன்படுத்தி நில விநியோகம் நடைபெற்றது. ஆகவே நில விநியோகத்தைத் தமிழக ஆட்சியாளர்கள் தோல்வி அடைந்து விட்டார்கள் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். இப்போது உள்ள தமிழக அரசாங்கமாவது உயர்நிலைக் குழு குறைந்தபட்சமாகக் கண்டறிந்த 2.5 லட்சம் ஏக்கர் நிலத்தை மீட்பதற்கு உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.