Skip to main content

'இதற்கு மேல கிளறினால் அவருக்கு தான் பாதிப்பு'- அமைச்சர் மா.சு எச்சரிக்கை 

Published on 12/02/2025 | Edited on 12/02/2025

 

 'If he stirs up more than this, he will be the one affected' - Minister M.S. warns actor Ganja Karuppu

சென்னை போரூரில் நகர்ப்புற சமுதாயம் நல மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு கால் வலி காரணமாக சிகிச்சைக்காக நேற்று (11.02,2025) காலை 10 மணியளவில் நடிகர் கஞ்சா கருப்பு சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் மருத்துவர்கள் இல்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதனால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக கஞ்சா கருப்பு வெளியிட்டுள்ள வீடியோவில், “அரசு மருத்துவர்கள் 2.5 லட்சம் ரூபாய் சம்பளத்தை வாங்கிக் கொண்டு மருத்துவர்கள் தனியாக கிளினிக் அமைத்துக் கொண்டு அங்குச் சிகிச்சை அளிக்கின்றனர். அதனால் மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்கு வந்து மருத்துவமனையைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர். இது பற்றி மருத்துவத் துறை அமைச்சர் பேச வேண்டுமா?. இல்லையா?. இன்றைக்கு அதற்காகப் போராட்டம் செய்யப் போகிறோம். வெறி நாய் கடித்து ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். மண்டை உடைந்து மாணவர்கள் ஒருவர் அமர்ந்துள்ளார்” எனக் கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.

இந்நிலையில் திருவள்ளூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் நடிகர் கஞ்சா கருப்பு வைத்த குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், ''நீங்கள் அவருடைய பெயரையே ஒரு மாதிரி சொல்கிறீர்கள். அதனால் அந்தப் பெயரை திரும்பப் பத்திரிகையாளர்களிடம் சொல்ல முடியாது. கருப்பு என்று வேண்டுமானால் சொல்லலாம். பெயருக்கு முன்னாடி ஏதாவது ஒரு நல்ல அடையாளத்தை சொல்ல வேண்டும். ஆனால் வேறு மாதிரியான அடையாளத்தை சொல்கிறீர்கள். அதை நான் சொல்ல விரும்பவில்லை.

அவர் அவருடைய மகளின் இஎன்டி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு போயிருக்கிறார். அப்போது மருத்துவர்கள் உள்ளே இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர் பேட்டியில் 'டாக்டர் இல்லை; செத்துப்போன பணத்திற்கு ட்ரீட்மெண்ட் செய்கிறார்கள்' என்று சொல்லி சினிமா வசனம் பேசுவதை போல் பேசிவிட்டு வந்திருக்கிறார். உடனடியாக பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயர் சமூக வலைத்தளத்தின் வாயிலாக எத்தனை மருத்துவர்கள் அங்கு இருந்தார்கள்; நேற்றைக்கு விடுமுறை நாளாக இருந்தாலும் கூட எத்தனை மருத்துவர்கள் இருந்தார்கள்; எத்தனை மருத்துவப் பணியாளர்கள் இருந்தார்கள்' என்ற செய்தியைச் சொல்லியிருக்கிறார். இதைவிட இந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என கருதுகிறேன். இதற்கு மேல கிளறினால் அவருக்கு தான் பாதிப்பு'' என்றார்.

சார்ந்த செய்திகள்