![saranya ponvannan about dhanush in neek audio launch](http://image.nakkheeran.in/cdn/farfuture/RNkw6tMPhI73BCB4NT-t9h6_N-ytOHRKAaBXM_6fcoE/1739366346/sites/default/files/inline-images/180_31.jpg)
தனுஷ் இயக்கத்தில் புதுமுகம் பவிஷ் நாராயண்(தனுஷின் சகோதரி மகன்), அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்டோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. இப்படத்தை தனுஷ் இயக்கியது மட்டும் இல்லாமல் தயாரித்தும் இருக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் வருகிற 21ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்.ஜே.சூர்யா, அருண் விஜய், இயக்குநர்கள் செல்வராகவன், கஸ்தூரி ராஜா, விக்னேஷ் ராஜா, ராஜ்குமார் பெரியசாமி, தமிழரசன் பச்சமுத்து, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் சரண்யா பொன்வண்ணன் பேசுகையில், “நாயகன் படத்தை இன்னும் எப்படி பேசுகிறார்களோ, அதே போல் வேலையில்லா பட்டதாரி படம் பற்றியும் பேசுகிறார்கள். அதை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. தனுஷ் அம்மா என்பது ஒரு அடையாளமாக மாறிவிட்டது.
மற்ற படப்பிடிப்பு தளத்தில் தனுஷ் பற்றி யாராவது கேட்டால் கூட அவரது நிஜ அம்மாவிடம் எப்படி கேட்பார்களோ, அவர் என்ன சாப்பிடுவார், எப்பிடி தூங்குவார்... இது போலத்தான் கேட்பார்கள். அந்தளவிற்கு சினிமா என்னை தனுஷோடு நிஜ அம்மாவாக இணைத்திருக்கிறது. ஆனால் இந்த செட்டில் பாவிஷ்தான் என் மகன். அவருடன் நடிக்கும் போது தனுஷ்கிட்ட ஒரு பொறாமையை பார்த்தேன். ஒரு காட்சியில் பாவிஷை என் மடியில் படுக்க சொல்லி தனுஷ் சொன்னார். பாவிஷ் படுத்தவுடன், ‘நான் படுக்க வேண்டிய இடம், சரி படு’ என சொன்னார். ‘எல்லா இடத்திலும் என் அம்மாவை நான் உனக்கு கொடுத்திருக்கேன், கொஞ்ச நாள் அந்த சந்தோஷத்தை அனுபவிச்சிக்கோ’ என பாவிஷிடம் சொல்வார். என்னை அம்மாவாக கொண்டாடக் கூடிய ஆள்தான் தனுஷ்” என்றார்.